கடந்த ஜூன் மாதம் பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்றிரவு 6வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.
மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் என்றைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதோ அன்று முதல் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு தலையில் இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வும் இதை கண்டு கொள்வது கிடையாது. பெயரளவுக்கு பெட்ரோல் விலை உயர்வால் நகர வாழ் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். எனவே இதன் விலையை உடனடியாக மத்திய விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி நழுவிக் கொள்வார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி.