கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவதாக சிறிலங்க அதிபர் ராஜபக்சே தன்னிச்சையாக அறிவித்தபோது, அதனை எதிர்த்த நாடுகள் அனைத்தும், “இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை, பேச்சுவார்த்தையின் மூலம்தான் நீடித்த தீர்வு காண முடியும்” என்று கூறின. இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கூட இதைத்தான் தொடர்ந்து கூறிவருகின்றன.
“தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துவிட்டால் இலங்கை இனப் பிரச்சனைக்கு மிகச் சுலபமாக தீர்வு கண்டுவிடலாம்” என்று போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொள்ளும் அந்த அறிவிப்பை வெளியிட்ட பொதுக்கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே பேசியுள்ளார். இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்க அரசிடம் இருந்த, இப்போதும் இருந்துவரும் ஒரே திட்டம் ‘இராணுவத் தீர்வு’தான் என்பதை அதன் கால் நூற்றாண்டு நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கும், ஆழ்ந்து கவனித்தவர்களுக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். இதனை வெளிப்படையாக பேசியதற்காக ராஜபக்சேவிற்கு நன்றி கூட தெரிவிக்கலாம்.
ஏனென்றால், இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதில்லை என்பதில் சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்துவரும் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. தமிழர்களை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும் அக்கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து எப்போதும் இருந்ததில்லை. சிறிலங்க சுதந்திரா கட்சியாகட்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் அல்லது இக்கட்சிகள் ஆட்சியில் அமர ஆதரவளிக்கும் ஜனதா விமுக்தி பெரமுணா, புத்தத் துறவுகளின் கட்சியான ஜாதிக ஹேல உருமையா என்ற கட்சியாகட்டும், இவையனைத்துமே தமிழர்களுக்கு ஆளும் உரிமை ஏன், நிர்வாக உரிமை அளிப்பதையே எதிர்த்துதான் வருகின்றன. இன்றளவும் இதில் மாற்றமில்லை. எனவே அந்த சிங்கள பேரிணவாத கண்ணோட்டத்தையே அதிபர் ராஜபக்சே பிரதிபலித்தார்.
PUTHINAM
ஒரு நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் ஒரு சமூக, அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமெனில், அப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அமைப்பு முறையும், அது சார்ந்த சிந்தனைப் போக்கும் மாறியிருக்க வேண்டும். ‘போதும் பிரச்சனை, அமைதிக்கு வழிவகுப்போம்’ என்கின்ற உணர்வு
மேலோங்கியிருக்க வேண்டும். அப்பொழுதான் தீர்வு குறித்தான பேச்சும், அதன் மீதான விவாதமும் ஒரு முடிவிற்கு கொண்டு செல்லும். இலங்கையைப் பொறுத்தவரை இது இன்றளவும் ஏற்படவில்லை.
தமிழர்களுக்கு எதிரான எண்ண ஓட்டங்களில் அங்கு எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதனால்தான் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்துவதற்குக் கூட பெரும்பான்மையாகவுள்ள சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கின்றன. ஆனால் இனப் பிரச்சனைக்கு இதனை ஒரு அடிப்படையாக இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கருதுகின்றன (இதனை ஏற்பதற்கில்லை என்று தமிழர்கள் என்றோ புறக்கணித்துவிட்டனர் என்பது வேறு விடயம்). ஆனால், அந்த இணைப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களிடமும், அவர்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகளிடமும் சரி, சிறுபான்மை இனத்தவராக உள்ள தமிழர்களுக்கு உரிமை அளிப்பது தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் எள்ளவும் முன்னேற்றம் காண முடியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்: “இலங்கை (சிறிலங்கா) என்பது சிங்கள தேசமே. இது பெரும்பான்மையாக உள்ள சிங்களர்களுக்கு உரிய நாடுதான். இந்த நாடு பற்பல நூற்றாண்டுகளாக சிங்கள அரசர்களால்தான் ஆளப்பட்டு வந்துள்ளது. சீனா சீனர்களாலும், இங்கிலாந்து ஆங்கிலேயர்களாலும், ஜெர்மனி ஜெர்மானியர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. இந்த நாடுகளில் எப்படியோ அதேபோல்தான் இலங்கையிலும் பெரும்பான்மை சிங்களவர்களால் ஆளப்பட்டு வருகிறது”. இதுதான் சிங்கள சமூக, அரசியல் சிந்தனை.
இந்த சிந்தனை மாற்றமின்றி நீடிப்பதால்தான் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு அங்குலம் கூட முன்னே செல்லவில்லை. தங்களுடைய ஆளுமையின் கீழ்தான் தமிழர்கள் வாழ்ந்தாக வேண்டும் என்ற கனவுலகில் சிங்கள அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் உறுதியாக நினைக்கையில், பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நடத்துவது?
கால் நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் பல ஆயிரக்கணக்கான சிறிலங்கப் படையினர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொருத் தாக்குதலிலும் பலியாகும் சிறிலங்க படையினரின் கணக்கை உடனடியாக தருவதைத்
தவிர்த்தாலும், கடந்த ஒரு மாத காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் எத்தனை சிறிலங்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், எவ்வளவு பேர் காயமுற்றனர் என்கின்ற கணக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தவறாமல் கூறிவருகிறது சிறிலங்க அரசு.
PUTHINAM
நேற்றுக் கூட ஒரு கணக்கை கொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத்த்தில் மட்டும் 200 சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 1,000 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு அமைச்சர் விவரமளித்துள்ளார். அதனை நாமும் செய்தியாக கொடுத்துள்ளோம் (பார்க்க செய்தி). தற்பொழுது போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை உண்மையை பிரதிபலிக்காது என்றாலும், ஒரு மாதத்திற்கு 200 வீரர்கள் பலியானதும், 1,000 வீரர்கள் காயமுற்றதும் அந்நாட்டு இராணுவத்தைப் பொறுத்தவரை பெரிய இழப்புதான். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வீரர்கள் எல்லாம் சிங்களவர்கள்தானே? இவர்களை எதற்காக இழக்கிறோம் என்று சிங்களவர்களும் சிந்தித்திருப்பார்களே? என்று எண்ணினால் அதன் தாக்கம் சற்றும் அதன் சமூக, அரசியல் அரங்கில் பிரதிபலிக்கவில்லை. இத்தனை வீரர்களை எதற்கு இழக்கிறோம் என்ற சிந்தனை பிறந்திருந்தால் நிச்சயம் அது சிங்களவர் மத்தியில் ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்புணர்வை தோற்றுவித்திருக்கும். அப்படி நடந்திருந்தால் அரசியல் ரீதியான ஒரு நியாயமான தீர்வை நோக்கி சிறிலங்க அரசு செல்லவேண்டும் என்கின்ற நிர்பந்தம் உருவாகியிருக்கும்.
அதுவும் ஏற்படவில்லை. எனவே சமூக, அரசியல் களங்களில் தீர்வுக்குச் சாதகமான ஒரு மாற்றமும் ஏற்படாத நிலையில், அங்கு தமிழர்களுக்கு எதிரான குருட்டுத்தனமான இராணுவ நடவடிக்கையை அதிபர் ராஜபக்சே முடுக்கிவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு தீர்வு என்பது முற்றிலும் சாத்தியமற்றது என்றே தெரிகிறது. பிறகு இலங்கை இனப் பிரச்சனைக்கு எதுதான் தீர்வு? அந்தத் தீர்வு இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்துமா?
இலங்கைக்குள்ளிருந்து தீர்வு காண்பதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விட்ட நிலையில், வெளியில் இருந்துதான் தீர்வு காணப்பட வேண்டும்.
அந்தத் தீர்வைப் பற்றி ஆராய முற்படும் முன்னர் கொசோவோவை நோக்கி பார்வையைத் திருப்புவோம்.