இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்யப்படவுள்ள
webdunia photo
FILE
கண்காணிப்பு ஒப்பந்த வரைவை மக்களின் பார்வைக்கு வைக்கத் தயங்கிய மத்திய அரசின் நடவடிக்கை காலனிய அடிமை மனப்பாங்கையே பிரதிபலிப்பதாக நமது மூத்த விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளது கருத்தில் எடுத்துக் கொண்டு யோசிக்கத்தக்கது.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு செய்யவுள்ள அந்த ஒப்பந்த வரைவின் விவரங்களை வெளியிடுமாறு இடதுசாரிகளும், அதற்கு முன்னர் நமது நாட்டின் மூத்த விஞ்ஞானிகளும் கோரியிருந்தனர்.
கண்காணிப்பு ஒப்பந்த வரைவு ஒரு ரகசிய ஆவணம் (privileged document) என்றும் அதனை பொதுவில் வெளியிட முடியாது என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அது ரகசியமான ஆவணம் அல்ல, அதனை பொதுவில் வெளியிட்டு தனது நாட்டு மக்களுக்கு இந்திய அரசு தெரிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று பன்னாட்டு அணு சக்தி முகமை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
webdunia photo
FILE
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் அமெரிக்கா பேசிவரும் கூடுதல் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மார்க்ஸிஸ்ட் கட்சி, அமெரிக்காவிற்கென்று ஒரு நடைமுறையும், இந்தியாவிற்கென்று வேறுபட்ட நடைமுறையும் உள்ளதாவென வினவியிருந்தது.
இந்த நிலையில், இந்தியா ஒப்புதலுக்கு அனுப்பிய ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டதும், அதனை மத்திய அரசின் அயலுறவு அமைச்சகம் முழுமையாக வெளியிட்டது.
இது ரகசியமான ஆவணம் அல்ல என்பதும், அதனை வெளியிடத் தடையேதும் இல்லை என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டதும், சற்றும் வெட்கமின்றி அந்த வரைவு ஆவணத்தை வெளியிட்டது மத்திய அரசு.
இதைத்தான், “வெள்ளைய காலனி
webdunia photo
FILE
ஆட்சியிடமிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுக் காலம் கடந்துவிட்டப் பின்னரும், அன்று நம்மிடையே ஆழ ஊடுருவி ஒட்டிக்கொண்டிருந்த காலனி அடிமை மனப்பாங்கு இன்றளவும் மாறாததை வெளிப்படுத்துகிறது” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
200 ஆண்டுக் காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நாம் எப்படி நடத்தப்பட்டோமோ அதே முறையில்தான் விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நமது நாட்டு மக்களை, அவர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடத்துகின்றன என்பதையே விஞ்ஞானி ஐயங்கரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இதே இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டும், காங்கிரஸூம் அதனை மிக விலாவாரியாக விவாதித்தன. ஆனால், நமது
webdunia photo
FILE
நாடாளுமன்ற அவைகளில் அது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோதெல்லாம் மேம்போக்காகத்தான் பதிலளிக்கப்பட்டதே தவிர, நேரான பதில் ஒருபோதும் தரப்படவில்லை. இதுதான் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு. அடிமைத் தளையில் இருந்து விடுபட்டாலும் அந்த மனப்பாங்கிலிருந்து நாம் (அதாவது நமது அரசியல்வாதிகள்) விடுபடவில்லை. விடுதலை பெற்றோம், ஆனால் ஜனநாயகமயமாகவில்லை. அதற்குள் உலகமயமாக்கலில் புகுந்துகொண்டு, “இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாகப் போகிறோம்” என்று முழங்கிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த ஆவணம் வெளியிடப்பட்டதால்தானே, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவது உள்ளிட்ட பிரதமர் கூறிய பல உறுதிமொழிகள் பெறப்படவில்லை என்பது வெளிபட்டது. இதனை மறைக்கத்தானே அதனை ‘ரகசிய ஆவணம்’ என்று கதை கூறியது.
webdunia photo
FILE
நாட்டின் மின் தேவை நிமித்தமாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடுவதிலேயே இவ்வளவு தயக்கம் காட்டும் அரசுகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் நமது நாட்டின் நலனை காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?
நமது மாநில அரசுகள் கூட, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அன்னிய நிறுவனத்திடம் (அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்து தங்கள் நிறுவனங்களைத் தொடங்க) புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடுகின்றன. ஆனால் அவற்றின் விவரங்களை மக்களுக்கு வெளியிடுவதில்லை!
இதெல்லாம் அந்த நாள் காலனிய ஆட்சியின் பிரதிபலிப்புகள்தான். சுதந்திரம் பெற்றோமே தவிர நமது மனப்பான்மையில் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. அதனால்தான் பல நேரங்களில் கடுமையாகப் பணியாற்றி நமது விஞ்ஞானிகள் சாதித்த பல விடயங்களை புரிந்துகொள்ளாமலேயே சிறுமைபடுத்துகிறோம். அப்படிப்பட்ட மனப்பான்மை நம்மிடம் இருந்ததால்தான் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நமது விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்களுக்கு நமது அரசு பதில் கூறாமல் புறக்கணித்தபோதுகூட பெரிதாக கூக்குரல் ஏதும் எழவில்லை.
அணு ஆயுத உருவாக்கத்திலும், அணு சக்தி தொழில் நுட்ப மேம்பாட்டிலும் நம்மை பெருமைப்படும்
webdunia photo
FILE
உயரத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானிகளை - அவர்களின் எண்ணங்களை அறியாமல், இதனை ஒரு அரசியல் ரீதியான ஒப்பந்தமாக கருதி - புறக்கணித்ததன் விளைவே இன்று மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுவோம், நாம் முதலில் அந்த காலனிய அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபடுவோம். உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நடைபோடுவோம்.