தூக்கு தண்டனை: கருணைக்கும் விலையுண்டு!

சனி, 19 ஏப்ரல் 2008 (15:34 IST)
webdunia photoWD
லாகூர் தொடர் குண்டு வெடிப்பில் குற்றம்சாற்றப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளையடுத்து, தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.

சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதி நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கருணை காட்டுமாறு இந்தியத் தலைவர்கள் பலரும் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிவைத்த பாகிஸ்தான் அரசு, தற்பொழுது நமது அயலுறவு அமைச்சர் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை உளமார்ந்த பாராட்டிற்குறியது என்பதில் இரு வேறுபட்ட கருத்துகள் இருப்பதற்கில்லை. அதே நேரத்தில் இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியா (அரசு) விடுக்கும் வேண்டுகோளிற்கு செவிசாய்க்கும் பாகிஸ்தான் அரசும், அதிபர் பர்வேஷ் முஷாரஃபும் சரப்ஜித்திற்கு முழுமையாகக் கருணை காட்டி ஏன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

பாகிஸ்தான் அரசின் அல்லது அந்நாட்டு நிர்வாகத்தின் இப்படிப்பட்ட தள்ளிவைப்பு நடவடிக்கைகள் அந்நாடு, நம் நாட்டிடம் ஏதோ எதிர்பார்ப்பதையே சுட்டுகாட்டுவதாகவுள்ளது. இதனை ஏனோ இந்திய அரசு வெளிக்காட்டாமல் தயங்குகிறது.

கருணை என்பதில் இரு அளவு கோள்கள் கூடாது என்கிறதா பாகிஸ்தான்? அப்படி அந்நாடு ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்கு உரிய பதிலளித்திட வேண்டிய கட்டாயம் இந்திய அரசிற்கு உண்டு.


இந்தக் கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்பு, இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை நாம் கவனித்தாக வேண்டும். அது ஹரியானா சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த காலித் மெஹம்மது என்ற 26 வயது பாகிஸ்தானியரின் தீடீர் மரணம்.

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வந்த காலித் மெஹம்மது மீண்டும் பாகிஸ்தான் திரும்பவில்லை என்றும், அவர் இந்தியாவில் உளவு பார்த்த தாகவும் கூறி கைது செய்யப்பட்டு (இந்தக் கைது குறித்து பாகிஸ்தான் அரசிற்கு இந்தியா தெரிவிக்கவில்லை) சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

சிறையில் கடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால்தான் காலித் மரணமடைந்ததாக அவருடைய உறவினர்களும், பாகிஸ்தான் அரசும் குற்றம்சாற்றின.

இதையடுத்து காலித் மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

காலித் மெஹம்மதுவின் மரணத்தினால் பாகிஸ்தானில் ஏற்பட்ட எதிர்ப்பையடுத்தே, சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பழிக்குப் பழி என்பது போன்ற நடவடிக்கையே என்றாலும், முறை தவறிய ஒரு நடவடிக்கையின் விளைவாக இரு நாடுகளிலும் ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்கவும், தவிர்க்கவும் இரு அரசுகளுமே இப்படிப்பட்ட பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

webdunia photoWD
இந்தப் பின்னணியில் சரப்ஜித் சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் கேட்கும் இந்திய சிறைகளில் உள்ள சிலரை விடுவிப்பதில் (அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாற்றப்பட்டிராத நிலையில்) எந்த தவறும் இல்லை.

அது சரப்ஜித் சிங்கின் உயிரை காப்பது மட்டுமின்றி, இப்படிப்பட்ட சட்டம் சார்ந்த பிரச்சனைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே நம்பிக்கை ஏற்பட வழிவகுக்கும்.

பாகிஸ்தானில் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்துள்ள நிலையில், இப்படிப்பட்ட நல்லெண்ண நடவடிக்கை காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இருதரப்புப் பிரச்சனைகளில் முன்னேற்றம் காண உதவிடும்.

ஒன்றைத் தராமல் மற்றொன்றைப் பெற முடியாது. கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவும் எதையாவது நாம் அளித்தாக வேண்டும்.

லாகூர் சிறையில் கடந்த 17 ஆண்டுகளாக மரணத்தை எதிர்நோக்கி செத்துக் கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கைப் போன்ற அப்பாவிகளைக் காப்பாற்ற இதனைச் செய்யலாம்.