இந்தியாவின் ஆன்மா கிராமத்தில்தான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நமது அரசுகளால் அதிகம் புறக்கணிக்கப்படும் பகுதி எதுவென்று கேட்டால், கிராமம்தான் என்று நறுக்கென்று கூறிவிடலாம்.
பேச்சு, பிரச்சாரம், திட்டம், அறிவிப்பு என்று எல்லாமே கிராமிய மணம் வீசும். விவசாயிகள் தற்கொலை, மழை வெள்ளத்தால் பயிர்கள் நாசம், புதிதாக பிறந்த பூச்சிகளால் தென்னைக்கு தொல்லை, திடீரென்று வீசிய புயல் காற்றால் வாழை தோட்டங்கள் அடியோடு நாசம் என்று நமது கிராம வாழ்வு சந்திக்கும் சோதனைகள் ஏராளம்.
webdunia photo
FILE
இப்படி நாளுக்கு நாள் நொந்து நூலாகும் கிராமத்தானுக்கு சாவு இப்படித்தான் வரும் என்று அறுதியிட்டுக் கூற எமனாலும் முடியாது. தற்கொலையில் இருந்து அவன் தப்பித்தாலும், சாவு எப்போதும் அவனை துரத்திக் கொண்டேயிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி.
பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையின் போது இடி தாக்கி ஆதி திராவிட பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இயற்கை இடர்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.1,50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி.
மண் சுவர் எழுப்பி, அதன் மீது குடிசை போட்டு வாழ்ந்துவரும் கிராம மக்கள் பலர், மழைக் காலத்தில் மண் சுவர் இடிந்து விழுந்து பலியான கதைகள் செய்திகளாக வந்து கொண்டுதானிருக்கிறது.
அதோடு, இடியால் (மின்னல் தாக்கி) உயிரிழப்போர் மிக அதிகம். வயலில் வேலை செய்யும் போதோ அல்லது கழனிக் காட்டில் நடந்து வரும் போதோ இடி மின்னலுடன் மழை பொழியும் போது இப்படி அகால மரணங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.
இடி மின்னலுடன் நகரங்களிலும்தான் மழை பெய்கிறது. ஆனால் மின்னல் தாக்கி இறப்பவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், உயரமான கட்டடங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள், கோயில் கோபுரங்கள் போன்றவற்றின் உச்சியில் அமைக்கப்படும் இடி தாங்கிகளே.
இவைகள், மின்னலடிக்கும் போது பூமியை நோக்கிவரும் பல ஆயிரம் வோல்ட் சக்தி வாய்ந்த மின்சாரத்தை அப்படியே இழுத்து பூமிக்குள் செலுத்திவிடுகின்றன. இதனால் நகர வாசிகள் பெரும்பாலும் தப்பித்து விடுகின்றனர்.
இந்த வசதி கிராமப் பகுதிகளில் இல்லாததே, நமது கிராம மக்கள் பலர் உயிரிழக்கக் காரணமாகிறது.
கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரேப்பாளையம் என்ற இடத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள சிறிய உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், திடீரென்று மேக மூட்டம் ஏற்பட்டு மழை வரும் சூழல் நிலவியது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத அளவிற்கு செவியைத் துளைக்கும் சத்தத்துடன் இடி விழுந்தது. நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவகத்திற்கு வெகு அருகிலேயே இடி விழுந்தது. வெளியில் வந்து பார்த்தபோது, அருகிலுள்ள வயல் பகுதியில் விளைந்திருந்த கரும்பு பயிர்கள் கருகிப் போயிருந்தது. அந்த இடத்தில் எவரேனும் இருந்திருந்தாலோ அல்லது சில அடி தூரம் தள்ளி உணவகத்தின் மீது விழுந்திருந்தாலோ... செய்தித் தாள்களில் படத்துடன் வந்திருப்போம்.
கிராம மக்கள் மட்டுமல்ல, அவர்களின் கால்நடைகள் உயிரிழக்கின்றன, தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைகின்றன. இந்த நிலை தவிர்கக் கூடியதே.
ஒவ்வொரு கிராமத்திலும் 100 முதல் 150 அடி உயரத்திற்கு ஒரு கோபுரம் அமைத்து இடி தாங்கியை அமைத்துவிட்டால் போதும், ஏராளமான உயிர்களை காப்பாற்றிவிடலாம். இதற்கென்று தனித் திட்டம் தீட்ட வேண்டியது அவசியமில்லை. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா அல்லது அண்ணா கிராம மேம்பாட்டுத் திட்டம் போன்ற கிராம தன்னிறைவுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே இடி தாங்கி கோபுரங்களை அமைத்து விடலாம்.
தமிழக அரசு உடனடியாக இதனை நிறைவேற்றிட வேண்டும். உயிரிழந்த பிறகு நிதியுதவி அளிப்பதைவிட, உயிரிழப்பை தடுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.