முல்லைப் பெரியாறு : பிரதமரிடம் முதல்வர் விளக்கம் பெறவேண்டும்!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (20:41 IST)
webdunia photoFILE
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக அதற்கு கீழே புதிதாக அணை கட்டுவது தொடர்பாக தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்றும், அது குறித்துப் பேச இரு மாநில முதல்வர்களை பிரதமர் அழைக்கவுள்ளார் என்றும் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்!

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமரைச் சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சுதானந்தன், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதியதொரு அணை கட்டுவதற்கான அவசியம் குறித்து தாங்கள் விளக்கியதை பிரதமர் மன்மோகன் சிங் புரிந்துகொண்டார் என்றும், விரைவில் தமிழக முதல்வரையும், தன்னையும் பிரதமர் அழைத்துப் பேசுவார் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனை பிரதமர் அலுவலகம் உறுதி செய்யவில்லை. ஆனால், டெல்லியில் பேசியதை மீண்டும் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அச்சுதானந்தன் உறுதி செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்கின்ற கேரளத்தின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது மட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், அந்த தீர்ப்பிற்கு எதிராக தனது அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியதையடுத்து, அதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், விசாரணையை தள்ளிப்போடுவதற்காக பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி ஒரு நாடகத்தை கேரள அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை உள்ளபடியே பலவீனமாகத்தான் உள்ளது என்றும், அதற்கு ஆபத்து ஏற்பட்டால் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தாங்கள் கூறுவதை பிரதமர் அப்படியே ஏற்றுக்கொண்டது போல, டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரை ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன்.

தங்களுடைய தேவைகளுக்காக கட்டிய இடுக்கி அணைக்கு போதுமான நீர் வரத்து இல்லாததால், பெரியாறு அணையை இல்லாமல் செய்து அதன்மூலம் இடுக்கி அணையை நிரப்பத் தேவையான நீர் வரத்தை உறுதி செய்ய கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வாசுதேவன் நாயர் கட்டவிழ்த்துவிட்ட பொய்தான் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்கின்ற கட்டுக் கதையாகும். இதனை நாம் மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை போலிப் பிரச்சனைதான் என்பதை அறிந்த அனைவருக்கும் தெரியும். டெல்லியில் இருந்து வரும் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தப் பொய்யை அப்பட்டமாக தோலுறித்துக் காட்டினார். நாமும் பல முறை நமது தளத்தில் பொய்யை உண்மையாக்கும் கேரளத்தின் முயற்சியை சுட்டிக்காட்டி எழுதியுள்ளோம்.

தங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தையும் போட்டுப் புதைத்துவிட்டு, முல்லைப் பெரியாறு பலவீனமாக இருக்கின்றது என்கின்ற பொய்யை உண்மையாக்க கேரளத்து அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேறுபாடின்றி நடிக்கின்றனர், நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரள அரசின் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளராக பதவிப் பொறுப்பில் இருந்தவர்கள் தவிர ஒருவர் கூட முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை.

webdunia photoFILE
மத்திய அரசின் நீர் வள ஆணையம் தனது பொறியாளர்களை பல முறை அனுப்பி சோதித்தது. கேரள அரசின் "அச்சத்தைப் போக்க" அணையை பலப்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதற்காக சில மராமத்துப் பணிகளை தமிழக அரசும் மேற்கொண்டு அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அதன்பிறகுதான் அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடிக்கு உயர்த்துமாறு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இவ்வாறிருக்க, பொய்யை உண்மையாக்கும் மாமுயற்சியில் ஈடுபட்டுவரும் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும், அம்மாநில பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும் தொடர்ந்து திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருகட்டம்தான் பிரதமரோடு நடத்திய சந்திப்பை இப்படிப்பட்ட பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகும்.

கேரள முதலமைச்சர் கூறுவதைப் போல, புதிய அணை கட்ட வேண்டும் என்கின்ற யோசனையை பிரதமர் ஏற்கவில்லை என்பதனை தமிழக முதலமைச்சர் அவரோடு பேசி தமிழக மக்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும். பிரதமரையும் விளக்கம் கூற வற்புறுத்த வேண்டும். இல்லையென்றால், கேரள அரசின் அவசரச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு வரும்போது, பிரதமர் இதில் தலையிட்டுள்ளார் என்கின்ற காரணத்தைக் கூறி விசாரணையை கேரள தரப்பு தள்ளிப் போட்டுவிடும் நிலை உருவாகும்.

தமிழக முதலமைச்சர் உடனடியாக பிரதமரிடம் பேச வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. அதில் இறுதித் தீர்ப்பளிக்கப்படும் வரை மத்திய அரசு எந்தவிதகத்திலும் தலையிடாது என்கின்ற உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகப் பெற்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அவசியம், அத்தியாவசியம்.