டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்றதும் நம் நினைவுக்கு வருவது... ஆசிரியர் தினம்தான்.
ராதாகிருஷ்ணன், இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற மிக உயரிய பதவியை வகித்த போதிலும், சிறந்த ஆசிரியர் என்ற முறையிலேயே அவர் நம்மை கவர்ந்தவர்.
செப்டம்பர் 5ஆம் தேதி 1888ஆம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார்.
அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன்.
இதன் தொடர்ச்சியாக 1946-52ஆம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ஆம் ஆண்டு முதல் 1962 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
ஆசிரியர் தின வரலாறு
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.
அதன்படியே அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.