உருக்கு தகடு ஏற்றுமதி வரி ரத்து!

சனி, 14 ஜூன் 2008 (11:26 IST)
உருக்கு தகடு, குழாய்கள் போன்றவைகளுக்கு ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரும்பு தாது ஏற்றுமதி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எல்லா வகை உருக்கு, இரும்பு பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க, இவற்றின் மீது ஏற்றுமதி வரி விதித்தது. உருக்கு தகடு, குழாய் போன்றவைகளின் ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும் என்று உருக்கு ஆலைகள் கோரிவந்தன.

அதே போல் உள்நாட்டில் இரும்பு தாது தாராளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும் இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரி அதிகரிக்க வேண்டும் என்று கூறி வந்தன.

இதையடுத்து நேற்று மத்திய அரசு உருக்கு, இரும்பு பொருட்கள், இரும்பு தாது ஆகியவற்றின் வரி விகிதங்களை மாற்றி அமைத்தது.

இதன் படி உருக்கு தகடு, குழாய் போன்றவைகளின் ஏற்றுமதி வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கம்பி, ஆங்கிள், சுருள் கம்பி ஆகியவற்றின் ஏற்றுமதி வரி ஏற்றுமதி வரி 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

கட்டுமானம், உள்நாட்டு தொழில் துறைக்கு தேவையான கம்பி போன்றவை தாரளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும் ஏற்றுமதி வரி அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உருக்கு, இரும்பு பொருட்களின் விலை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. பணவீக்கம் அளவு கோளில், இதன் பங்கு 22 விழுக்காடாக இருக்கின்றது. இவற்றின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கின்றது. நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விபரப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உருக்கு, இரும்பு ஏற்றுமதி வரியை மாற்றியுள்ளது.

உருக்கு ஆலைகளுக்கு தேவைப்படும் முக்கிய கச்சா பொருளான இரும்பு தாது ஏற்றுமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளன.

முன்பு 62 விழுக்காடு இரும்பு துகள் உள்ள இரும்பு தாதுவிற்கு 1 டன்னிற்கு ரூ.50ம், 62 விழுக்காட்டிற்கு மேல் இரும்பு துகள் உள்ள இரும்பு தாது டன்னிற்கு ரூ.300 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.

இது தற்போது எல்லா வகை இரும்பு தாதுவிற்கும் ஏற்றுமதி வரி 15 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இரும்பு தாது ஏற்றுமதிக்கு முன்பு செலுத்திய வரியை விட, தற்போது மூன்று மடங்கு வரி செலுத்த வேண்டியதிருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்