50 நாடுகளுக்கு இறக்குமதி சலுகை- பிரதமர் அறிவிப்பு!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (15:47 IST)
34 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு சலுகை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

புது டெல்லியில் இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் 34 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட மிக குறைந்த அளவு வளர்ச்சியுள்ள 50 நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியில் சலுகை அளிக்கிறது. இந்த சலுகை மூலம் இந்த நாடுகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இறக்கமதி வரி விலக்கு அளிக்கப்படும். இவை இந்தியா இறக்குமதி வரி விதிக்கும் பொருட்களில் 94 விழுக்காடு பொருட்களுக்கு பொருந்தும் என்று அறிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கும் கடன் இரு மடங்காக அதிகரிக்கப்படும். 2003-04 ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 215 கோடி டாலர் கடன் வழங்கப்பட்டது. இது 2008-09 ஆம் ஆண்டில் 540 கோடி டாலராக அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

இந்தியாவிற்கும் 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், “21 ம் நூற்றாண்டிற்கான இருதரப்பு உறவுகளுக்கான புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். நாம் இரு தரப்பு சம உரிமை, பரஸ்பர நன்மை மற்றும் மதிப்பு என்ற அடிப்படையில் கூட்டு ஏற்பட வேண்டும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இருநூறு கோடி மக்களும் இணைந்து கூட்டுறவாக இருக்க முடியம் என்பதை வளரும் நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இணைந்து உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும்

பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்திப்பதற்கு பொதுவான அணுகுமுறை மற்றும் வேலைத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆப்பிரிக்க நாடுகளில் ரயில்,தகவல் தொழில் நுட்பம்,தொலை தொடர்பு மின் உற்பத்தி, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் போக்குவரத்து வசதி போன்ற உள்கட்டுமான அமைப்புகளை கொடுப்பதற்கு இந்தியா முன்னுரிமை வழங்கும். அத்துடன் இந்தியா சிறு. நடுத்தர. குறுந்தொழில் வளர்ச்சிக்கும், தனியார் துறைக்கும், அரசுக்கும் இடையிலான கூட்டுறவுக்கும் முன்னுரிமை வழங்கும்.

அத்துடன் உயர் கல்வியில் குறிப்பாக விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம், தொழில் பயிற்சி அளித்தல் போன்ற துறைகளில் கல்லூரிகளை தொடங்கவும், உள்நாட்டு கல்வி நிறுவனங்களை பலப்படுத்தவும், ஆப்பிரிக்க நாடுகளிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் இந்தியா உதவி அளிக்கும். ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க வழங்கும் கல்வி உதவி தொகை வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படும். தொழில் நுட்ப திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,100 இல் இருந்து 1,600 ஆக அதிகரிக்கப்படும” என்று மன்மோகன் சிங் அறிவித்தார்.

இன்று புது டெல்லியில் தொடங்கிய இரண்டு நாள் மாநாட்டில் தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, தான்சேனியா, கானா, செனகல், காங்கோ ஆகிய நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் நெஜிரியா, ஜாம்பியாவின் துணை குடியரசு தலைவர், அல்ஜிரியா, எகிப்து, கென்யா, லிபியா நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் ஆப்பிரிக்க யூனியன் அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடிற்கு முன்னதாக நேற்று, 14 நாடுகளின் அயலுறவு அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதில் இந்தியா-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, வர்த்தக உறவுக்கான இரண்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்