தாராள வர்த்தக ஒப்பந்தம் உடனே செய்ய வேண்டும் - உலக வங்கி தலைவர்

சனி, 5 ஏப்ரல் 2008 (16:50 IST)
உலக அளவிலான தாராள வர்த்தக ஒப்பந்தம், இப்போது ஏற்படாவிட்டால், எப்போதுமே ஏற்படாது என்று உலக வங்கி தலைவர் எச்சரித்துள்ளார்.

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் உலக தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளுக்கும், இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்கும் இடையே விவசாய விளை பொருட்களுக்கு மானியம் வழங்குதல், இறக்குமதி வரி நீக்குதல் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

இது தோஹா உடன்படிக்கை என்று அழைக்கப்படும், உலக அளவிலான தாராள வர்த்தக உடன்படிக்கை ஏற்படுவதற்கு முட்டுக் கட்டையாக உள்ளது.

வாஷிங்டனில் இது பற்றி உலக வங்கி தலைவர் ராபர்ட் தோஹா கருத்தரங்கு ஒ‌ன்‌றி‌ல் பேசுகையில், இந்த சமயத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை என்றால், பிறகு எப்போதும் ஏற்படாது என்று கூறினார்.

அடுத்த வாரம் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் உலக வங்கி தலைவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அவர் மேலும் பேசுகையில்,தோஹா பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படுவதற்கு தடையாக உள்ள விவசாயம், உற்பத்தி துறை, சேவை துறை போன்றவைகளில் உள்ள இடர்களை நீக்க வேண்டும். இந்த பிரச்சனையை இப்போது தீர்த்து,உடன் படிக்கை எட்டமுடியாவிட்டால், பிறகு எப்போதுமே உடன்படிக்கை ஏற்படாது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான பொருளாதார காரணங்களை புறக்கணி‌ப்பதால் உலகமயமாக்கலுக்கு நன்மை இல்லை பாதிப்புதான் ஏற்படும். உணவு பொருட்களின் விலைகள் குறைவாக இருக்க வேண்டும் என்று ஏழைகள் கருதுகின்றனர். இதுவே விவசாயத்திற்கு வழங்கும் மானியங்களை குறைப்பதற்கும், தாரளமாக இறக்குமதி செய்வதை அனுமதிப்பதற்கு‌ம் சரியான தருணமாகும்.

விவசாய விளை பொருட்களின் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவதும்,உலக அளவிலான வர்த்தகத்தை தாராளமயமாக்குவதால், வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகள் உற்பத்தியை அதிகமாக்க உதவிகரமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் விவசாயதுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் வளரும் நாடுகள் இலாபமடையும் என்ற பிரச்சாரம் தவறானது. வளரும் நாடுகளில் உற்பத்தி அதிகரிப்பதால், உலக அளவில் உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். விலைகள் குறைவாக இருப்பதால் வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் இரண்டுமே பலனடையும் என்று கூறினார்.

உலக தாராளமய வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை, இதன் தலைமையகம் அமைந்துள்ள தோஹாவில் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்