இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு எல்லா வகை சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது!
உள்நாட்டு சந்தையில் தாரளமாக சமையல் எண்ணெய் கிடைக்கவும், இவற்றின் விலை அதிகரிப்பததை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு அயல் நாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மார்ச் 17 ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை ஒரு வருடம் அமலில் இருக்கும்.
இந்தியாவில் இருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து எண்ணெய் ஆண்டின் முதல் நான்கு மாதங்களான ( எண்ணெய் ஆண்டு நவம்பர் முதல் அக்டோபர் வரை) நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 30 ஆயிரம் டன் கடலை எண்ணெயும், 5,000 டன் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்துடன் கணிசமான அளவு கடுகு எண்ணெயும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் உள்நாட்டு தேவைக்கு வருடத்திற்கு 100 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் பாதிக்கு மேல் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் பிப்ரவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட அளவை விட முன்று மடங்கு. சென்ற வருடம் பிப்ரவரியில் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட்டது என சமையல் எண்ணெய் ஆலை உற்பத்தியாளர் சங்கத்தின் புள்ளி விபரங்களில் இருந்து தெரியவருகிறது.