உருக்கு, இரும்பு கம்பிகள், தகடுகள் உட்பட எல்லா பொருட்களின் விலையும் 10 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதாக உருக்கு ஆலைகள் அறிவித்தன.
தொழிலதிபர்கள் கூட்டத்தில் நேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உருக்கு, இரும்பு விலை அதிகரிக்காமல், உற்பத்தியை அதிகரித்து சமாளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உருக்கு ஆலைகள் மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி வரி, இரும்பு தாது மீதான வரி, கோக் எனப்படும் எரி பொருள் மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்த்தன. ஆனால் பட்ஜெட்டில் எவ்வித வரி சலுகை அறிவிப்பும் இல்லை.
இதனால் உருக்கு ஆலைகள் நேற்று முதல் உருக்கு, இரும்பு பொருட்கள் மீது சராசரியாக 10 விழுக்காடு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதன்படி டாடா ஸ்டீல் டன்னுக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை அதிகரித்துள்ளன.
பொதுத்துறை நிறுவனமான செயில் டன்னுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனமும் எல்லா வகை உருக்கு, இரும்பு ரகங்களின் மீது டன்னுக்கு ரூ.2,500 அதிகரித்திருப்பதாக தெரிவித்தது.
புதிய விலையின் படி ஹாட்ரோல்ட் காயில் எனப்படும் தகடு விலை டன்னுக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி 1 டன் தகட்டின் விலை ரூ.33,000 ஆக அதிகரிக்கும்.
உருக்கு தகடு, கம்பி, உருட்டு கம்பி போன்றவைகள் வாகன தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு துறையில் உள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன.
இரும்பு கம்பி பெரும்பாலும் வீடு, பாலங்கள் போன்ற கட்டுமானத்துறையில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இரும்பு விலை உயர்வால், ஏற்கனவே சிமெண்ட் விலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுமானத்துறை, மேலும் நெருக்கடியை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த மாதம் உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உருக்கு உற்பத்தியாளர்களை சந்தித்து உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சரின் வேண்டுகோளுக்கு பிறகு, உருக்கு ஆலைகள் ஏற்கனவே அதிகரித்த விலையை குறைத்துக் கொண்டன. இதன்படி கம்பிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000ம், தகடுகளுக்கு ரூ.500 குறைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஷ் பஸ்வான் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, உருக்கு, இரும்பு பொருட்களின் விலையில் அரசு தலையிடாது என்று தெரிவித்தார்.