ஏற்றுமதி இலாபத்திற்கு வரி விலக்கு இல்லை : சிதம்பரம்!
செவ்வாய், 4 மார்ச் 2008 (14:08 IST)
ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புது டெல்லியில் நேற்று பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மத்திய பட்ஜெட் பற்றிய கருத்தரங்கை நடத்தியது.
அப்போது அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இலாபம் குறைந்து பாதிக்கப்படுகின்றன. இவைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்நிறுவனங்களின் இலாபத்தின் மீது வரி விதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் ஃபிக்கி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசி ப. சிதம்பரம் கூறியதாவது :
“முன்பு வருமான வரிச் சட்டம் 80 ஹெச்.ஹெச்.சி படி, ஏற்றுமதி இலாபம் மீது வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் விதி முறைகளின் படி, இந்த சலுகை 2004 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.
எனவே மீண்டும் இந்த சலுகையை வழங்க முடியுது. ஏனெனில் இது உலக வர்த்தக அமைப்பின் விதி முறைகளுக்கு எதிரானது. எல்லா இலாபங்களின் மீதும் வரி விதிக்கப்பட வேண்டும். லாபங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. இப்பொழுது 20.6 விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. மீதம் உங்களுக்கு இலாபமாக கிடைக்கின்றது” என்று கூறினார்.
முன்னதாக ஃபிக்கி தலைவர் ராஜூவ் சந்திரசேகர் பேசுகையில், ஏற்றுமதியாளர்களுக்கு எல்லாவித சேவை வரிகளையும் நீக்க வேண்டும். தற்காலிகமாக இலாபத்தின் மீதான வருமான வரியை நீக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்தபட்ச வருமான வரியை நீக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த கருத்தரங்கில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மன் ராகுல் பஜாஜ், பட்ஜெட்டில் சிறிய கார்களுக்கும், இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு உற்பத்தி வரி 16 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக கார்களுக்கும், இரண்டு சக்கர வாகனங்களுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதால், இரண்டு சக்கர விற்பனை பாதிக்கப்படும்.
எனவே இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு உற்பத்திய வரியை 8 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய சிதம்பரம், நான் சிறிய ரக கார்களுக்கு உற்பத்தி வரியை விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக குறைத்துள்ளேன். இதே மாதிரி இரண்டு சக்கர வாகனங்களுக்கும் குறைத்துள்ளேன். நான் உங்களுடைய ஆலோசனையை கவனத்தில் கொள்கின்றேன் என்று பதிலளித்தார்.
டாடா நிறுவனம் ரூ.1 லட்சம் விலையில் நானோ காரை செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு உற்பத்தி வரி 12 விழுக்காடு தான் விதிக்கப்படும்.
நானோ காரை டாடா நிறுவனம் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்திய போதே, இதனால் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது. இதனால் தான் இரண்டு சக்கர வாகனங்கள் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று இதன் உற்பத்தியாளர்கள் கூறு வருகின்றனர்.