ரயில்வே பட்ஜெட் - தொழில் துறை வரவேற்பு!

புதன், 27 பிப்ரவரி 2008 (14:01 IST)
ரயில்வே பட்ஜெட்டால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நேற்று மக்களவையில் அடுத்த நிதி ஆண்டிற்கான (2008-09) ரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.

இந்த பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். ரயில்வே பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும் வகையில் இல்லை. அதே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி உள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளன.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், ரயில்வே துறையை நவீன மயமாக்கி,. செலவுகளை குறைக்க சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் போக்குவரத்து கட்டணத்தை குறைத்துள்ளது பற்றி இந்திய தொழிலக கூட்டமைப்பு கருத்து தெரிவிக்கையில், இது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த சிறிது உதவி செய்யும் என்று கூறியுள்ளது.

பெட்ரோல், டீசல் போக்குவரத்து கட்டணம் ஐந்து விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருடத்திற்கு ரூ.50 கோடி மிச்சமாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஏற்கனவே பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து வருவதாக கூறிவருகின்றன.

இந்நிலையில் போக்குவரத்து கட்டண குறைப்பால், பெட்ரோலிய நிறுவனங்கள் அதன் பலன்களை நுகர்வோருக்கு அளித்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா என்பது போகப் போக தெரியும்.

ஃபிக்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்திய தொழில் வர்த்தக சபைகளின கூட்டமைப்பு தலைவர் ராஜூவ் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், "பெட்ரோலிய போக்குவரத்து கட்டணம் 5 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது நல்ல நடவடிக்கை. இது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். ரயில்வே அமைச்சர் ரயில் இருப்பு பாதையை மேம்படுத்த தனியார் துறை பங்கேற்புடன் ரூ.1 லட்சம் கோடி திரட்ட போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய தனியார் தொழில் துறைக்கு பல வாய்ப்புகள் உருவாகும்" என்று கூறினார்.

அசோசெம் என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பின் தலைவர் வேணுகோபால் தத் கூறுகையில், "ரயில்வேயின் கட்டண குறைப்பால், இதை அதிக அளவு பயன்படுத்துவார்கள். சிமென்ட், உருக்கு, இரும்பு போக்குவரத்திற்கும் கட்டண சலுகை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்