இந்திய மென்பொருள்-சேவைத் துறைகளின் ஏற்றுமதி ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டும் : நாஸ்காம்
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:09 IST)
இந்திய அயல் அலுவலக சேவைத் துறையின் மென்பொருள், சேவைப் பணிகளின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ரூ.1,60,000 கோடியைத் தாண்டும் என்றும், இதில் உள்நாட்டுச் சந்தையின் மதிப்பு ரூ. 92,000 கோடியாக இருக்கும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய மென்பொருள், சேவைப் பணிகளின் ஏற்றுமதி வரும் 2010 ஆம் நிதியாண்டில் ரூ.2,40,000 கோடி இலக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்கான ரூ.3 லட்சம் கோடியை எட்டுவதற்குத் தேவையான சூழ்நிலை உள்ளதாகவும், அந்த இலக்கை எட்டுவதற்கு ஏற்ற ஏற்றுமதி நடைப்பெற்று வருவதாகவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 20 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் நாஸ்காம் தலைவர் இலட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில் நுட்ப அயல் அலுவலக பணித்துறையின் அபரிவிதமான வளர்ச்சி இலக்கை மீண்டும் உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது. நடப்பு 2007 -08 நிதியாண்டில் இத்துறையின் வளர்ச்சி 33 விழுக்காடு அளவுக்கு உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் மீது பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளது.
வரும் 2010 -க்குள் இத்துறையின் வளர்ச்சி பல்வேறு தொழில் மற்றும் சேவைத் துறைகளில் எல்லைக் கடந்த வளர்ச்சியை அடையும் என்றும், அப்போது, மென்பொருள் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியிலும், அயல் அலுவலக பணிகள் தொடர்பான சேவையிலும் உலக நாடுகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தகுதியுடைய நாடுகளில் இந்தியா தான் முதன்மையானது என்பதனை அது உறுதிப்படுத்துவதாக அமையும் என்றும் நாஸ்காம் தலைவர் இலட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.