2010-ல் திரைப்படத் துறையின் மதிப்பு 40,000 கோடி ஆகும் : அசோசெம்!
Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (19:32 IST)
நமது நாட்டின் திரைப்படத்துறையின் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும், 2010 -ம் ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவிற்கு இத்துறையில் வர்த்தகம் நடைபெறும் என்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த நிலையில் ஆண்டுக்கு 50 -க்கும் மேற்பட்ட மொழிகளில் 1,200 திரைப்படங்கள் எடுக்கும் நிலையில் 60 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அசோசெம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு 800 திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 25 லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வருகிறது.திரைப்படத் துறையின் இன்றைய மதிப்பு 23 ஆயிரம் கோடியாகும். தற்போது 100 மில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவனியை இத்துறை ஈட்டி வருகிறது.
இது தொடர்பான அசோசெம் ஆய்வு அறிக்கை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம், அந்த அமைப்பின் தலைவர் வழங்கியுள்ளார். இந்தியாவில் உள்ள பல மொழி, கலாச்சாரங்கள் பொழுதுபோக்குத் துறையில் பல வண்ணங்களையும், வகைகளையும் பெற்றுள்ளது.
இதற்குச் சான்று நாட்டில் தற்போது உள்ள 200 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களும், 12 கோடி பார்வையாளர்கள், 7 கோடி கேபிள் இணைப்புகள் என தொலைக்காட்சித் துறை விரிவடைந்து வருவதுமாகும் என்று அவர் கூறினார்.