இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 6 முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாலி தீவில் நுஸா திவா தீவில் பாமாயில் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குந்ர் பி.வி.மேத்தா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்தால் சமையல் எண்ணெய் பயன்பாடும் அதிகரிக்கும். இதன் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 6 முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைக்கும் சமையல் எண்ணெயுடன் வருடத்திற்கு கூடுதலாக 7 லட்சம் டன் முதல் 8 லட்சம் டன் சமையல் எண்ணெய் கூடுதலாக தேவைப்படும்.
இதற்கு ஏற்றார் போல் உள்நாட்டு சமையல் எண்ணெயின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. உள்நாட்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே கூடுதலாக கிடைக்கின்றது. உள்நாட்டின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது.
இந்தியா இந்த வருடம் அக்டோபர் வரை 57 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியின் மூலம் தன்னிறைவு அடையும் வரை தொடர்ந்து அதிகளவு பாமாயில் இறக்குமதி செய்யப்படும் என்று மேத்தா கூறினார்.