புதிய தொழில் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவானது: ராமதாஸ்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (10:41 IST)
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தொழில் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையாக தோன்றுவதாக பா.ம.க. ‌‌நிறுவன‌ர் மரு‌‌த்துவ‌ர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தகவல் தொழில்நுட்பத் தொழில்களை மட்டுமே மேம்படுத்துவதற்கு மாறாகத் தமிழகத்தின் தொழில் அடித்தளத்தை விரிவாக்க ஊக்கமளித்தல், உழவர்களின் வருவாய் உயர்வுக்கும், வேளாண் விளைபொருள்களின் மதிப்புக் கூட்டலுக்கும் வழிகோலும் வேளாண் தொ‌ழில் தொடர்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை, சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை அமைத்தல் உள்பட இந்த தொழில் கொள்கையில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன.

அதே நேரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பல்வேறு கூறுகளும் இந்த தொழில் கொள்கையில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி தகுந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டுகிறேன்.

தனியார் தொழில் பூங்காங்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் இந்த தொழில் கொள்கையில் அபரிமிதமான ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மையும் தொழிலும் இணக்கமான முறையில் வளர்ச்சி பெறுவதற்கு இக் கொள்கைத் திட்டத்தின் கீழ் நிலத்தை வகைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பெரும் மோதல்களில்தான் போய் முடியும்.


நேரடியாகத் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் என்ற அடிப்படையில் மிகப் பெரிய ஊக்குவிப்புகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்படி கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு இடமளிக்கப்படவில்லை. தொழில் தேர்ச்சி இல்லாத ஓர் லட்சம் பேருக்கு மறுபயிற்சி அளிக்கப்படும் என்பது தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இல்லை. மொத்தத்தில் இந்தக் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கும் ஆதரவான கொள்கையாகத் தோன்றுகிறது.

உயர்ந்த தொழில்தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகவும் ஒரு சார்பான, நிலத்தை அடிப்படையாக் கொண்ட தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டதாகவும் தோன்றுகிறது. மாறாக தொழில் தேர்ச்சி இல்லாத பரந்த உழைக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவது இக் கொள்கையின் நோக்கமாக இல்லை எ‌ன்று டா‌க்ட‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்