''சென்னை அருகே 300 ஏக்கர் நிலப்பரப்பில் மோட்டார் வாகன பாகங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்'' என்று புதிய தொழில்நுட்பக் கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதிய தொழில் கொள்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தொழில் சிறப்பு பெருவழிச் சாலை அமைப்பதில் முதல் கட்டமாக சென்னை-மணலி-எண்ணூர் பகுதியும், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை பகுதியும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வீட்டு வசதி, உடல்நலப் பாதுகாப்பு, பள்ளி வசதிகள் ஆகியவற்றுடன் தொழிலக சிறப்பு பகுதிகளாக உருவாக்கப்படும்.
இது போன்று மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் சிறப்புப் பகுதியும் மேம்படுத்தப்படும். அடிப்படை கட்டமைப்பு வசதி பற்றி திட்டமிடுதல், செம்மையான போக்குவரத்து ஏற்படுத்துதல், தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக இந்த சிறப்பு பகுதிகளுக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போல் நுண்ணிய உயர் தொழில்நுட்பப் பூங்காவை சிப்காட் அமைக்க உள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி திறமைகளை மேம்படுத்துவதில் கணிசமான அளவு முதலீடு செய்வதற்காக தொழில் பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்கப்படும். பட்டப்படிப்பு, பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு நிலை உயர்த்தப்படும்.
மாணவர்களிடையே கருத்து பரிமாற்றத் திறன், குழுவாகச் செயல்படும் தன்மை, பணித் திறமை பணி ஈடுபாடு, ஆராய்ந்தறியும் திறமை போன்ற சிறந்த பண்புகளை மேம்படுத்துவதற்காக பாட முறைகள் உயர்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலைகளுக்கும் தயாரிக்கப்படும்.
என்ஜினீயரிங் கல்லூரிகள், பட்டய படிப்பு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், கலை-அறிவியல் கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை உறுப்பினர்களாகக் கொண்டு பயிற்சிப் பாடத் திட்டத்தை திருத்தி அமைக்கவும், பாடப் பிரிவுகளில் சேர்கிறவர்களின் எண்ணிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கவும் மனித ஆற்றல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும்.
தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் இடையேயான உடனுழைப்புக்காக உயர் கல்வி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் அவற்றைச் சுற்றிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைவதை மாநில அரசு ஊக்குவிக்கும்.
2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுக்குள் பயிற்சி பெறாத ஒரு லட்சம் பேருக்கு உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு தொடர்புடைய தொழில், பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
தொழில் பகுதிகளுக்கான தொழில் திறம் மேம்பாட்டு முயற்சி மூலம் மோட்டார் வாகனம், தோல், துணித் தொழில், மின்னணு, வன்பொருள் ஆகிய தொழில்கள் அமைந்துள்ள தொழில் பகுதிகளில் கவனம் செலுத்தப்படும்.
தொழில்களுக்குப் பொருந்தத்தக்க புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், தனி ஆராய்ச்சி-மேம்பாட்டு பிரிவுகள் அல்லது தனிப்பட்ட நபர்கள் ஆகியோருக்கு காப்புரிமை தாக்கல் செய்யும் செலவில் 50 விழுக்காடு அல்லது ரூ.2 லட்சம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை அளிக்கப்படும்.
உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி-வளர்ச்சி மேம்பாட்டு மையங்களை அமைப்பதில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருள்களுக்கு நுழைவு வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதுடன், மதிப்புக் கூட்டு வரியும் விதிக்கப்படமாட்டாது. அத்தகைய மூலதனப் பொருள்கள் வணிக உற்பத்திக்கு பயன்படுத்தப்படக்கூடாது.
உற்பத்தித் தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனங்கள், சமுதாய, சமூக வளர்ச்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதை அரசு ஊக்கப்படுத்தும்.
சென்னைக்கு அருகில், சுமார் 300 ஏக்கர் நிலத்தில் மோட்டார் வாகனப் பாகங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று ஏற்படுத்தப்படும். மோட்டார் வாகனப் பாகங்கள் தயாரிப்பில் உயர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதற்கான வசதிகளும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்படுத்தப்படும்.
சென்னை, ஓசூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களைச் சுற்றிலும் உள்ள பல்தொழில் பயிலகங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஏற்றுமதிகளை மேலும் அதிகரிப்பதற்காக, கோயம்புத்தூருக்கு அருகில், சுமார் 250 ஏக்கர் நிலத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம், உள்ளூர் தொழிலுடன் இணைந்து பொது-தனியார் துறை பங்கேற்பு திட்டமாக, இறவை இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் வார்ப்படம் ஆகியவற்றிற்கான பொறியியல் பொருட்கள் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
மின்னணு தொழில் துறையின் உடனுழைப்புடன், அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி சில்லுகள், மற்றும் மின்னணு வன்பொருள் வடிவமைப்பிற்கான சிறப்புத் தகுதி மையம் ஒன்றை அரசு ஏற்படுத்தும். இது தவிர, சிப்காட் நிறுவனத்தின் மூலம் சென்னை-ராணிப்பேட்டை பெருவழிச் சாலையில் தோல் பொருட்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்று ஏற்படுத்தப்படும். பொருத்தமான ஒரு இடத்தில் பன்னாட்டு தரத்துடனான சுற்றுச் சூழலை பாதிக்காத உயர் தொழில்நுட்ப தோல் பதப்படுத்தும் வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
முதலீடுகளை மேம்படுத்துவதற்காக திறன் அடிப்படையில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையங்கள் அமைக்கப்படும். இவற்றை அமைக்கிற தொழிற்சங்கங்களுக்கு நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ஒரு கோடி ரூபாய் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
தொழில்களுக்கான எழுத்துப் பணியைக் குறைக்கும் நீண்டகால நடவடிக்கையாக, மதிப்புக் கூட்டுவரி செலுத்துதல், விவர அறிக்கைகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யும். தொழில் நடைமுறையை கண்காணிக்க மின் ஆளுகை முறை அறிமுகம் செய்யப்படும்.
தொழிற்சாலைகளை தொடங்குவதற்காக ஒப்புதல்களை வழங்குவதற்காக மாநில, மாவட்ட அளவிலான ஒற்றைச்சாளர குழுக்களுக்கு அதிகாரம், கால வரம்புகள் வழங்கும் வகையில் தொழில் வழிநடத்துதல் சட்டம் இயற்ற பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.