இறுதி கட்டத்தில் தோகா பேச்சுவார்த்தை : கமல்நாத்!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (17:30 IST)
உலக வர்த்தக அமைப்பிற்காக தோகாவில் நடைபெறும் பேச்சுவார்த்தை உடன்பாடு காணும் கட்டத்தை எட்டிவிட்டதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும், வளரும் நாடுகளின் ஏற்றுமதி அதிகரிக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தோகாவில் பேச்சு துவக்கப்பட்டது.

உலக வர்த்தக அமைப்பில் விவசாய பொருட்கள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உடன்பாடு காண்பதற்காக இந்த பேச்சு நடந்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ச்சியுற்ற நாடுகள், தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரம் உட்பட தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்களை, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உட்பட வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வசதியாக அவை இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

வளரும் நாடுகளில் உற்பத்தியாகும் விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதியாக, அமெரிக்கா போன்ற வளர்ச்சியுற்ற நாடுகள், தங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்களை குறைக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

வளர்ச்சியுற்ற நாடுகள் வேளான் துறைக்கு வழங்கி வரும் மானியத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்காத காரணத்தினால் இந்த பேச்சில் எவ்வித முடிவும் எட்டமுடியவில்லை.

இத்துடன் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கம் இடையே வேளான் பொருட்களுக்கு மானியம் வழங்குதல், இறக்குமதி வரி பிரச்சனைகளிலும் கருத்து வேறுபாடு உள்ளது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தோகா பேச்சில் உடன்பாடு எட்ட முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து வந்த செய்திகளில் தோகா பேச்சில், இந்தியா நீக்கு போக்குடன் நடந்து கொள்ளும் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் தோகா பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் கமல்நாத், தோகா பேச்சு உடன்பாடு காணும் வகையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புது டெல்லியில் ஃபார்ச்சூன் இதழ் சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் கமல்நாத் பேசும் போது, இதற்கு முன் நடந்த பேச்சை விட, தற்போது உடன்பாடு காணுவதில் நெருங்கி வந்துள்ளோம். இந்தியாவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையே வேளான் பொருட்களில் ஏறக்குறைய கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் தொழில் துறையில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகின்றேன். இதில் உடன்பாடு எட்ட ஐரோப்பிய கூட்டமைப்பு காலக் கெடுவை நிர்ணயித்தால், இந்தியா அதற்கு ஏற்றார் போல் செயல்பட தயாராக உள்ளது.

இந்தியாவில் உள்ள 65 கோடி ஏழை விவசாயிகளை பாதிக்கும் வகையில் விட்டுக் கொடுக்கும் போக்குடன் நடந்து கொள்ள முடியாது என்று கமல்நாத் கூறினார்.

இந்த கருத்தரங்கில் இந்தியாவிற்கு வந்துள்ள ஜெர்மன் சான்சிலர் (பிரதமர்) ஏன்ஜ்சலா மெர்கில் பேசுகையில், நாங்கள் தோகா பேச்சில் உடன்பாடு காண இந்தியாவுடன் சேர்ந்து வேலை செய்து வருகின்றோம். இந்தியா பயனுள்ள வகையில் செயல்பட முடியும். சிறிய அளவிலேய் கருத்து வேறுபாடு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் உடன்பாடு காண வேண்டும். அப்படி உடன்பாடு எட்ட முடியாவிட்டால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் முதலில் இருந்து பேச்சு வார்த்தையை துவக்க வேண்டியதிருக்கும் என்று கூறினார்.

தோகா பேச்சுவார்த்தையே வளரும் நாடுகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகதான் துவக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள உடன்பாடு நகல் ஒப்பந்தத்தில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இயந்திரம் உட்பட தொழில்துறை உற்பத்தி பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று உள்ளது. அத்துடன் வேளான் பொருட்கள் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாட்டை நீக்குவதால், இதன் இறக்குமதி வரியை குறைப்பதால் தங்கள் நாட்டு (வளரும் நாடுகளின்) விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சப்படுகின்றன. இதனால் தான் தோகா பேச்சில் எவ்வித முடிவும் எட்ட முடியாமல் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்