ஏலக்காய் விற்பனை மையங்களில், ஏலக்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏலக்காய் தினசரி விற்பனைக்காக அதிகளவு வந்து கொண்டிருந்தாலும் விலை குறையவில்லை.
தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரிலும், கேரளாவில் குமுளியிலும் கணினி முறையில் ஏலக்காய் ஏலம் விடும் மையங்கள் உள்ளன.
போடிநாயக்கனூரில் உள்ள விற்பனை மையத்திற்கு சென்ற வியாழக்கிழமை 14.53 டன் ஏலக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் சுமார் 14 டன் விற்பனையானது.
முதல் தரம் கிலோ ரூ.425 முதல் ரூ.549 வரை விற்பனையானது. குறைந்த தரம் உள்ள ஏலக்காய் கிலோ ரூ.195 முதல் ரூ.250 வரை விற்பனையானது.
இதே போல் குமுளியிலும் ஏலக்காய் வாங்குவதில் ஏற்றுமதியாளர்களும், மொத்த வர்த்தகர்களும் ஆர்வம் காட்டினார்கள். இங்கு சென்ற புதன்கிழமை விலையை விட ஞாயிற்றுக் கிழமை ஏலத்தில் கிலோவுக்கு ரூ.10 முதலி ரூ.20 வரை விலை அதிகரித்தது. இங்கு 51.7 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு 8 மில்லி மீட்டர் நீளமுள்ள பருமன் ஏலக்காய் கிலோ ரூ.549 வரை விற்பனையானது. 7 முதல் 8 கிலோ வரை உள்ள பருமன் ஏலக்காய் ரூ.450 முதல் ரூ.470 வரை விற்பனையானது.
7 மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள ஏலக்காய் கிலோ ரூ.420 வரை விற்பனையானது. சென்ற வாரம் குமுளி ஏல மையத்திற்கு 127 டன் ஏலக்காய் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதில் 121 டன் விற்பனையானது.
அடுத்த வாரம் ரம்ஜான், அதனை தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புது வருடம் ஆகிய பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் அயல்மாநில வியாபாரிகள் அதிகளவு ஏலக்காயை ஏலத்தில் வாங்கினார்கள்.
ஏலக்காய் தோட்டங்களில் கடந்த 5 நாட்களாக பருவநிலை நன்கு உள்ளது. இதனால் ஏலக்காய் பறிப்பது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், ஏலக்காய் வரத்து குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.