ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (13:34 IST)
ரிலையன்ஸ் எனர்ஜியின் இயக்குநர்கள் குழு, இதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பவர் பங்குகளவெளியிட ஒப்புதல் தந்துள்ளது.

ரிலையன்ஸ் அம்பானி குழுமமும், ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டும் இணைந்து தொடங்கியுள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனம், மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான முதலீட்டை பொதுப் பங்குகளை வெளியிட்டு திரட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியள்ளது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம், பங்குகளை வெளியிடுவதற்கு அனுமதி பெறும் விண்ணப்பம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் எனர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் எவ்வளவு முதலீடு திரட்டப்படும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை. ரிலையன்ஸ் பவர் பல மாநிலங்களில் இயற்கை எரிவாயுவின் மூலம் மின் உற்பத்தி நிலையம், அனல் மின் உற்பத்தி நிலையம், மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது.

தற்போது பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்படும் நிதி இந்த திட்டங்களுக்காக பயன்படுதிதிக் கொள்ளப்படும்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள சாசன் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற, ரூ.16,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை தேவைப்படும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று, ரிலையன்ஸ் எனர்ஜியின் பங்குகளின் விலை 7.9 விழுக்காடு அதிகரித்தது. இதன் விலை ரூ.1,205.50 ஆக உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்