டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதை எதிர் கொள்ள, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் உற்பத்திச் செலவை குறைத்து. திறமைமையை வளர்த்துக் கொண்டு, போட்டியை சந்திக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் இருந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.5 விழுக்காடு அதிகரித்து உள்ளது. இந்த நிலை மேலும் தொடரும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஏற்றுமதி செய்வது கட்டுபடியாகாது. ஏற்றுமதியாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அத்துடன் சர்வதேச சந்தையில், மற்ற நாடுகளுடன் போட்டியிடுவது சிரமம். எனவே அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி அமைப்புக்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் அமெரி்க்கா சென்றுள்ள அமைச்சர் கமல்நாத் நியயூயார்க்கில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சீனா அந்தியச் செலவாணி சந்தையை கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால் நாங்கள் பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, அந்நியச் செலவாணிக்கு மதிப்பு நிர்ணயிப்பதை சந்தையின் போக்கிற்கே விட்டு விட்டோம்.
இதனால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்து என்பது எனக்கு தெரியும். இதை சமாளிக்க அவை திறமையை வளர்த்து, உற்பத்திச் செலவை குறைக்க வேண்டும். இதன் மூலமே சர்வதேச சந்தையில் போட்டிகளை எதிர் கொள்ள வேண்டும்.
இந்த வருட (2007) தொடக்கத்தில் இருந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் இருந்து 14 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த பிரச்சனை.யில் ரிசர்வ் வங்கி தலையிடவில்லை. ஏனெனில் இதனால் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை மலிவாகிறது. இதனால் உலகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இந்தியாவிற்கு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது என்று கமல்நாத் கூறினார்.
கமல்நாத்திடம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுமா என்று கேட்டதற்கு அவர், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நீ்ண்ட காலமாக பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனால் தகவல் தொழில் நுட்பத் துறைக்கும், இந்திய கிராமப்புறஙகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது என்று கமல்நாத் கூறினார்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வியசாயத்துறையை சார்ந்தவர்கள் கூட, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களு்க்கு வழங்கும் சலுகை போல், எங்களுக்கும் கொடுத்தால், நாங்களும் அவர்கள் அளவு வளர்ந்திருப்போம் என்று கூறுகின்றனர்.
இருப்பினும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு, எந்த விதமான சலுகை வழங்க முடியும் என அரசு பரிசீலிக்கும் என்று கமல்நாத் கூறினார்.
டாலரின் மதிப்பு சரிவதால் ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாயில், பாதியளவிற்கும் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களில் இருந்து வருகிறது. மத்திய அரசு 2007 -08 நிதியாண்டில் 160 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், இந்த இலக்கை எட்டுவது கடினம் என ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்