அணு மின் உற்பத்தி நிலையங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கொதிகலன் மற்ற மின் உற்பத்தி சாதனங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து நிறுவி, மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும், நிகர இலாபமும் அதிகரித்துள்ளது!
இந் நிறுவனத்தின் 43 வது வருடாந்திர பொதுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் இதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஏ.கே.பூரி கூறியதாவது;
பாரத மிகுமின் நிறுவனத்தின் விற்று-முதல் எந்த வருடமும் இல்லாத வகையில், 2006-07 நிதியாண்டில் ( சென்ற நிதியாண்டில்) ரூ 18,739 கோடியாகவும், நிகர இலாபம் ரூ 2,415 கோடியாகவும் உள்ளது. இந் நிறுவனம் புதிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமும், புதிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் 2012 ஆம் ஆண்டில் விற்று- முதல் 45,000 கோடியாக உயர்த்த உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக மயமாக்கலின் குறிக்கோளை எட்டும் வகையில் இப்பொழுதுள்ளதை போல் ஆறு மடங்கு ஏற்றுமதியை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந் நிறுவனத்தின் நடவடிக்கைகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விரிவுபடுத்தும் வகையில், மற்ற நிறுவனங்களுடன் இணைவது, புதிய நிறுவனங்களை வாங்குவதன் மூலம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய திட்டமிட்டுள்ளது. இதற்கு கடந்த மூன்று வருடங்களில் கிடைத்த மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணியும், விற்று - முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதே போல் கடந்த இரண்டு வருடங்களில் வரிக்கு முந்தைய இலாபம், மற்றம் நிகர இலாபம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இது வரை இல்லாத அளவில் சென்ற நிதியாண்டிற்கு ரூ 600 கோடி பங்கு ஈவுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வருடம் ரூ 145 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது.
பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு சென்ற ஆண்டு மட்டும் ரூ 35,643 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இதற்கு சென்ற நிதியாண்டின் முடிவில் இதனிடம் ரூ 55,000 கோடிக்கு ஆர்டர் இருந்தது.
இதற்கு சர்வதேச வர்த்தகத்தில் சென்ற வருடம் சிறப்பான ஆண்டு எனலாம். சென்ற ஆண்டு மட்டும் ரூ 1,903 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக வருடத்திற்கு ஏற்றுமதி ஆர்டர் ரூ 1,275 கோடியாக இருந்தது.
இதற்கு சென்ற வருடம் பத்து நாடுகளில் இருந்து 900 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை வழங்கவும், 5,600 மெகா வாட் ஆம்பியர் அளவிற்கு மின்கடத்திகள் ( டிரான்ஸ்பார்மர் ) வழங்கவும் ஆர்டர்கள் கிடைத்துள்ளது.
அதிக திறனுள்ள அனல் மின் உற்பத்தி நிலையம், உயர் அழுத்த மின் கடத்திகள், இயற்கை எரிவாயு மின் உற்பத்தி டர்பைன், அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கான சாதனங்கள் வழங்குதல் ஆகியவை 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்திலும், அதற்கு பிறகும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டம் குறித்து பூரி கூறுகையில், 2012 ஆண்டு வரையிலான செயல் திட்டம் வகுப்பப்பட்டுள்ளது எனவும், 2012 ஆம் ஆண்டில் விற்று - முதல் ரூ 45,000 கோடி ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.