விரைவில் உலக டிஜிட்டல் நூலகம்!
Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (13:48 IST)
உலகளவில் புகழ்பெற்ற கலாச்சார நிறுவனங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய படைப்புகளை இணையதளம் மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய உதவும் வகையில் உலக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக யுனெஸ்கோவும், அமெரிக்க நூலகங்கள் குழுவும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
படைப்புகள் தேவைப்படுவோர் பாரீஸ் நகரத்தில் அமையவுள்ள இந்த நூலகத்தின் தலைமையகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
பின்னர், இசைக்குறிப்புகள், புகைப்படங்கள், திரைப்படங்கள், வரைபடங்கள், புத்தகங்கள், கையெழுத்துக் குறிப்புகள் ஆகியவற்றை இலவசமாகஇணையதளம் வழியாகப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தகவல் தொடர்பு உதவி நிர்வாக இயக்குநர் அப்துல் வகீத்கான், அமெரிக்க நூலகங்கள் குழுவின் நூலகர் ஜேம்ஸ் ஹெச் பில்லிங்டன் ஆகியோர் பதிவு நடவடிக்கைகளை கவனிப்பார்கள்.
டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான முதல்கட்ட முயற்சிகளில் எகிப்து, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளின் தேசிய நூலகங்கள், ரஷ்யாவின் தலைமை நூலகம், பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா அமைப்பு ஆகிய 5 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ். போர்த்துக்கீஸ் ஆகிய 5 மொழிகளில் தகவல்களைப் பெறவும் வசதிகள் செய்யப்படவுள்ளன.
நேரம், இடம், தலைப்பு, பங்கேற்றுள்ள நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைத் தேட முடியும்.
வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர் கூச்சிரோ மத்சூரா, ''உலகின் நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்ள உதவும் முயற்சியில் ஈடுபடுவது பெருமையாக உள்ளது'' என்றார்.
''யுனஸ்கோவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. உலகில் பரவிக்கிடக்கும் பாரம்பரிய நினைவுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் யுனஸ்கோ ஊழியர்கள் ஈடுபட வேண்டும்'' என்று நூலகர் பில்லிங்டன் கூறினார்.