ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் சுமை நெருக்கடிக்கு சரியாகவும், அனைத்து நாடுகளும் இணைந்து தீர்வு காணாவிட்டால் யூரோ நாணயம் மதிப்பிழக்கும் என்றும், அதனால் பிரச்சனை மேலும் கடுமையாகும் என்றும் பிரான்ஸ் அமைச்சர் ஜான் லியோனெட்டி எச்சரித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
“இந்தச் சிக்கல் மிகவும் கடுமையானது. யூரோ நாணயம் கடுமையாக மதிப்பிழக்கலாம், அது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடும் சவாலை உண்டாக்கலாம்” என்று லியோனெட்டி கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள கடன் சிக்கலைத் தீர்க்க, ஒன்றியத்தின் அங்கமாகவுள்ள 27 நாடுகளும் ஒருமித்து செயல்பட வேண்டும். இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள லியோனெட்டி, கடன் சிக்கல் பிரச்சனையில் கடன் மதிப்பீடு செய்யும் நிறுவனங்களின் பங்கை கண்டித்தார். ஒரு நாட்டின் கடன் அளிப்பு மதிப்பு என்பது அரசியல் சார்ந்து பிரச்சனை, அதனை அந்நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நிதி நிறுவனங்கள் அல்ல என்று கூறியுள்ளார்.