விசா பிரச்சனை: இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்போம் – அமெரிக்கா
திங்கள், 23 ஆகஸ்ட் 2010 (17:47 IST)
அயல் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று பணியாற்றும் தொழில் நெறிஞர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்தியதால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
எல்லைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டத்தின் அடிப்படையில் ஹெச் 1பி, எல் 1 விசா கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் தங்கள் கிளைகளை இயக்கும் இந்திய நிறுவனங்களையும், அங்கு சென்று பணியாற்றிடும் தொழில் நெறிஞர்களையும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர், “புதிதாக நிறைவேற்றியுள்ள சட்டம் குறித்து இந்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எங்களால் இயன்ற அளவிற்கு பதிலளிப்போம்” என்று கூறியுள்ளார். இப்பிரச்சனையில் இந்திய அரசின் கவலைகளை நாங்கள் அறிந்துள்ளோம், ஆனால் இப்பிரச்சனையை இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பிற்கு கொண்டு செல்வது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இவர் இப்பிரச்சனையில் இந்திய அரசுத் தரப்புடன் பேச்சுவரும் அமெரிக்க அதிகாரி என்று பிடிஐ செய்தி கூறுகிறது.