அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

ஞாயிறு, 4 ஜூலை 2010 (13:25 IST)
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஜுன் 25-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101.10 கோடி டாலர் அதாவது, ரூ.4,651 கோடி அதிகரித்து 27,698 கோடி டாலராக அதாவது ரூ.12,74,108 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 318.60 கோடி டாலர் அதிகரித்து 27,596.90 கோடி டாலராக இருந்தது. அன்னியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து மூன்று வாரங்களாக உயர்ந்து வருகிறது.

அன்னியச் செலாவணி கையிருப்பில், இதர நாட்டுச் செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர்., பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக யுரோ, யென், பவுண்டு உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகள் மதிப்பு உயர்ந்தது.

இதனையடுத்து, இவற்றின் மதிப்பு 101.30 கோடி டாலர் அதிகரித்தது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 20 லட்சம் டாலர் சரிவடைந்தது. தங்கம் மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைத்துள்ள இருப்பு நிதி ஆகியவற்றின் மதிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்