செயில் பங்கு விற்பனை மூலம் ரூ.16 ஆயிரம் கோடி

வியாழன், 8 ஏப்ரல் 2010 (15:51 IST)
பொதுத்துறை நிறுவனமான செயில் என்று அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையத்தின் 20 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று அமைச்சரவையின் பொருளாதார விவகார குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், செயில் நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடியும், செயில் நிறுவனத்திற்கு ரூ.8,000 கோடியும் கிடைக்கும்.

இதில் அரசு வசம் உள்ள பங்குளில் 10 விழுக்காடு விற்பனை செய்யப்படும். புதிதாக பத்து விழுக்காடு பங்கு விற்பனை செய்யப்படும். இவை இரண்டு தவணைகளாக விற்பனை செய்யப்படும்.

இரண்டு தவணைகளாக அரசின் பங்குகள் 5 விழுக்காடும், புதிய பங்குகள் 5 விழுக்காடும் விற்பனை செய்யப்படும்.

தற்போது செயில் நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்கள் வசம் 14.2 விழுக்காடு உள்ளது.இது பங்கு விற்பனைக்கு பிறகு 31 விழுக்காடாக அதிகரிக்கும்.
தற்போது செயில் நிறுவனத்தில் அரசு வசம் 85.82 விழுக்காடு பங்குகள் உள்ளன. இந்த பங்கு விற்பனைக்கு பிறகு, அரசின் பங்குகள் 69 விழுக்காடாக குறையும் என்று தெரிவித்தார்.



வெப்துனியாவைப் படிக்கவும்