தேவை சரிவை நோக்கி இந்தியா: அசோசெம்

வியாழன், 26 மார்ச் 2009 (22:47 IST)
இந்திய ரூபாயின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் தேவை சரிவு (Deflation) எனும் நிலையை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது என்று அசோசியேடட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்றழைக்கப்படும் இந்திய வணிக அமைப்பு கூறியுள்ளது.

மொத்த விலை அடிப்படையிலான ரூபாயின் பணவீக்கம் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 0.27 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 0.44 விழுக்காடாக இருந்தது. இந்த நிலை தேவை சரிவை (Deflation) நோக்கியே கொண்டு செல்கிறது என்று அசோசெம் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

பணப் புழக்கம் குறையும் போதும், கடனளிக்க வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் போதுமான நிதி இல்லாத சூழலிலும் வாங்குவது (டிமாண்ட்) குறையும் போது இப்படிப்பட்ட தேவை சரிவு ஏற்படும். அந்த நிலையை நோக்கியே இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஜிண்டால் கூறியுள்ளார்.

இந்த நிலையை தவிர்க்க பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) எடுக்க வேண்டு்ம என்றும், வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனின் மீதான வட்டியையும், வங்கிகளி்ன் ரொக்க இருப்பையும் குறைக்க வேண்டும் என்றும் ஜிண்டால் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, பொது முதலீட்டை - குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் தனியார்-அரசு கூட்டு முதலீட்டின் வாயிலாக - அதிகரிக்க வேண்டும் என்றும் ஜிண்டால் கூறியுள்ளார்.

மத்திய அரசு உற்பத்தித் தீர்வை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த நிலையை மாற்றும் என்று தாம் நம்புவதாகவும் ஜிண்டால் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்