ஐஸ் தொழிற்சாலைகளுக்கு அரசு மானியம்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:39 IST)
கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் வகையில், கடலோர மாவட்டங்களில் உள்ள ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நவீனப்படுத்த மத்திய அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி மூலம் அரசுக்கு கணிசமாக அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்தியாவில் இருந்து வருடத்திற்கு ரூ. 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மீன், நண்டு போன்ற கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 100 க்கும் அதிகமான கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இதில் கடல் உணவைப் பதப்படுத்துவதில் முக்கிய பொருளாக ஐஸ் பயன்படுத்தப்படுகிறது.

கடலில் பிடித்து வரும் மீன், இறால், நண்டு போன்றவைகளை சில நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க, ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தேவையான ஐஸ் கட்டிகளை தயாரிக்க நான்கு மாவட்டங்களில் 100 ஐஸ் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.

இவை 10 டன் முதல் 20 டன் ஐஸ் உற்பத்தி கொண்டவை. ஐஸ் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐஸ் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த, ஐஸ் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஐஸ் தொழிற்சாலைகளுக்கு புதிய மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், புதிய ஐஸ் தொழிற்சாலை அமைக்க 25 விழுக்காடு மானியமும், ஏற்கெனவே உள்ள ஐஸ் தொழிற்சாலையை நவீனப்படுத்த ஆகும் செலவில் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.

புதிய ஐஸ் தொழிற்சாலையைப் பொருத்தவரை ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அதிகபட்சம் ரூ. 31 லட்சம் வரையும், ஐஸ் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அதிகபட்சம் ரூ. 14 லட்சம் வரையும் மானியமாக அளிக்கப்படும்.

கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் அமைக்கப்படும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த சலுகை கிடையாது. தனியாக ஐஸ் உற்பத்தி நிலையம் மட்டும் அமைப்பவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.

ஏற்கெனவே உள்ள ஐஸ் தொழிற்சாலையை நவீனப்படுத்த 50 விழுக்காடு, அதிகபட்சமாக ரூ.26 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த மானியம் வழங்க கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால், ஐஸ் தொழிற்சாலைகளில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி இருக்க வேண்டும். மேலும், ஐஸ் உற்பத்தியாகும் கேன்கள் துரு பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பம் தூத்துக்குடியில் உள்ள கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், முதலில் ஐஸ் தொழிற்சாலை உரிமையாளர்கள், அவர்களின் பணத்தில் ஐஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் அல்லது நவீனப்படுத்த வேண்டும்.

இதன் பிறகு, கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஐஸ் தொழிற்சாலையை ஆய்வு செய்து, பரிந்துரை செய்த பின்பு அரசின் மானியத் தொகை கிடைக்கும்.

இது குறித்து கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநர் அசோக்குமார் கூறுகையில்,
இந்த மானியத் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த மானியத் திட்டம் குறித்து, ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு விளக்குவதற்காக 4 மாவட்ட ஐஸ் உற்பத்தியாளர்கள் கூட்டம் இம் மாதம் 20 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்