சீரகம்- மிளகுக்கு முழு வரிவிலக்கு

சனி, 7 பிப்ரவரி 2009 (17:10 IST)
சீரகம், மிளகு, எள் போன்ற முக்கிய உணவுப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் தமிழக நிதி மற்றும் வணிகவரித் துறை அமைச்சர்கள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் 2009-10 ஆம் ஆண்டு நிதிநிலை (பட்ஜெட்) குறித்த முன்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.எஸ்.ஆர். நடராஜன், செயலர் பி. சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூடடத்தில் அவர்கள் பேசும் போது, சீரகம், மிளகு, எள் போன்ற முக்கிய உணவுப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

உணவு எண்ணெய்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மிகக் குறைந்த அளவே விளையும் எள், கடலை போன்ற எண்ணெய் வித்துக்களுக்கும் வரிவிலக்கு வழங்கிட வேண்டும்.

முந்திரிப் பருப்பு, பேரீச்சம் பழம் போன்று 12.5 விழுக்காடு வரிவிதிப்பில் உள்ள "கிஸ்மிஸ்' ( உலர் திராட்சை) பழத்துக்கும் வரியை 4 விழுக்காடாக குறைக்கவேண்டும்.

நிபந்தனைக்கு உள்பட்டு வரிவிலக்கு அளிக்கப்பட்ட பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களுக்கு மத்திய விற்பனை வரி (சி.எஸ்.டி.) வசூலிக்க வேண்டிய நிலை இல்லாமல் "சி' படிவம் மட்டுமே பெறவேண்டிய நிலை உள்ளது. எனவே, பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு நிபந்தனைக்குள்பட்டு என்பதை நீக்கிவிட்டு, பொதுவான வரிவிலக்கு அளிக்கவேண்டும்.

முற்றிலும் வரிவிலக்கு பெற்ற பொருள்களை வணிகம் செய்யும் வணிகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கணக்குகளை சமர்ப்பித்தால் போதும் என தற்போது அரசாணை உள்ளதால், இணையதளம் மூலம் கணக்குகளை சமர்ப்பிக்கும்படி கேட்கக் கூடாது.

ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான விற்பனைத் தொகை உள்ள வரிசெலுத்தும் பொருள்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கும் இணையதளம் முறையிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

தமிழக வணிக மற்றும் விவசாயிகளுக்கு நீண்டகாலமாக பெரும் பிரச்னையாக இருந்துவரும் "மார்க்கெட் கமிட்டி செஸ்' சட்டக் குழப்பங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்