பாக்கெட் உணவு மீது விரைவில் புதிய கட்டுப்பாடு

புதன், 31 டிசம்பர் 2008 (15:00 IST)
புது தில்லி, டிச. 30: பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க, மத்திய அரசு புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது.

நொறுக்கு தீனி முதல் உடனடி தயாரிப்பு வரை பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அவசர யுகத்தில் சமையல் செய்ய நேரம் ஒதுக்க முடியாதவர்கள், இந்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது.

இந்த உணவுப் பொருட்களின் தரத்தை கடுமையாக அமல் படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி அரசு பரிந்துரைக்கும் தரத்துடன் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றை திரும்பப் பெறவும் புதிய விதிமுறை ஏற்படுத்தப்படும்.

தற்போது இதற்கான வரைவு விதிமுறைகள் வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய விதிமுறைகள் போலியான, கலப்பட உணவுப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்த உதவும். எந்தெந்த உணவு வகைகள் எத்தகைய சுகாதார தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான தர நிர்ணயத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அளிக்கும்.

இந்த வரைவு கொள்கை புத்தாண்டில் வெளியாகும் என உணவு பாதுகாப்பு, தர ஆணையத்தின் தலைவர் பி. சுவ்ரத்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த வரைவுக் கொள்கை வெளியானவுடன், இது குறித்து ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும். இதன் விவரங்கள் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்கப்படும். இந்த வரையறைக்குள் இல்லாத உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

2010 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள் மீது இந்த கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படும். இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படும் எந்த வெளிநாட்டு உணவுப் பொருள்களும் இந்திய தர நிர்ணய விதி முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு உணவுப் பொருள்களை பரிசோதனை செய்யும் நடைமுறை ஏதும் அமலில் இல்லை.

புதிய விதிமுறை அமல்படுத்தப்படும்போது, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களின் பாதுகாப்புத் தன்மையை ஆராய விஞ்ஞானிகள் குழு அமைக்கப்படும் என்று சுவ்ரத்தன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்