கோதுமை விலை முடிவில் தாமதம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (13:54 IST)
புது டெல்லி: கோதுமை, எண்ணெய் கடுகு போன்றவைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை.

ரபி பருவத்திற்கான கோதுமை, எண்ணெய் கடுகு ஆகியவைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ( கொள்முதல் விலை) கோதுமை குவின்டாலுக்கு ரூ.1,080, எண்ணெய் கடுகுக்கு ரூ. 1,900 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாய விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் விலை நிர்ணய குழு [The Commission for Agricultural Costs and Prices (CACP) ] பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கோதுமை, எண்ணெய் கடுகுக்கு ஆதார விலையை நிர்ணயிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

மத்திய வேளாண் அமைச்சகம், விவசாய விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் விலை நிர்ணய குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் நிதி அமைச்சகமும், திட்டக்கமிஷனும் ஆதார விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.

அத்துடன் மற்ற சில அமைச்சகங்கள், ரபி பருவத்தின் பயிர்கள் அறுவடையாவதற்கு சில மாதங்கள் உள்ளன. இப்போதே குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

கரிப், ரபி பருவங்களில் விவசாய பணிகள் துவங்குவதற்கு முன்னரே, நெல், கோதுமை, பணப்பயிர்கள், சிறு தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் ஊக்கத்துடன், விவசாய பணிகளை மேற்கொள்வார்கள். அரசு அறிவிக்கும் விலைக்கு ஏற்ப, எதை பயிரிடுவது என்று முடிவு செய்ய முடியும் என்று விவசாய சங்கங்கள், வேளாண் அறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக, ரபி பருவத்தில் விதைப்பு நடைபெறுவதற்கு முன்னரே, அக்டோபர் மாத வாக்கில், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை, நெல் உட்பட பல்வேறு விளை பொருட்களின் விலையை அதிகரிப்பதால், இதன் விலைகள் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம், திட்ட கமிஷன் போன்ற துறைகளில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் கருதுகின்றனர். இந்த காரணத்தினால் தான், விலை அறிவிப்பை தாமதப்படுத்துகின்றனர்.

ஆனால் வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ரபி பருவத்திற்கு கோதுமை கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,080 எண்ணெய் கடுகுக்கு ரூ. 1,900 என மத்திய அரசு அறிவிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்