சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மினரல் தண்ணீர் விலையைவிட பெட்ரோல் விலை குறைந்து விட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 38 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உற்பத்தி விலையை கணக்கிடும்போது, தண்ணீர் பாட்டிலை விட குறைவாக இருக்கிறது.
முன்பு பேரல் ஒன்றுக்கு 150 அமெரிக்க டாலர் வரை விற்று வந்த கச்சா எண்ணெய், தற்போது பேரல் 38 டாலருக்கு கிடைக்கிறது. ஒரு பேரல் என்பது சுமார் 190 லிட்டர் கச்சா எண்ணெய். இதன் விலை சுமார் ரூ.1,800. (38 அமெரிக்க டாலர்)
190 லிட்டர் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தால் 28 லிட்டர் பெட்ரோலும், 85 லிட்டர் டீசலும் பெறலாம். இது தவிர மண்ணெண்ணெய் போன்ற மற்ற பெட்ரோலியப் பொருட்களும் சுத்திகரிக்கலாம்.
இதன்படி கணக்கு பார்த்தால் போக்குவரத்து செலவு மற்றும் வரிகள் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.11, டீசல் அடிப்படை விலை ரூ.13. ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.
பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.49க்கும், டீசல், ரூ.35க்கும் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22 வரை வரி விதிக்கப்படுகிறது.