புது டெல்லி: அயல்நாடுகளில் இருந்து சுத்தப்படுத்தாத சர்க்கைரையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சூசகமாக தெரிவித்தார்.
புது டெல்லியில் நேற்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் [ Indian Sugar Mills Association ( ISMA) ] 74 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து சரத் பவார் பேசுகையில், 2008-09 ஆம் ஆண்டில் கரும்பு விளைச்சல், அதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை உற்பத்தி தேவையான அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் சில மாநிலங்களில் இருந்து வரும் தகவல்களில் இருந்து, முன்னர் மதிப்பிட்டதைவிட கரும்பு உற்பத்தி குறையும் என்று தெரிகிறது. சர்க்கரை உற்பத்தியை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக அரசு எடுக்கும் முடிவு சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் நன்மையாக இருப்பதுடன், பயன்படுத்தும் மக்களுக்கும் பயன்தர கூடிய வகையில் இருக்கும் என்று கூறினார்.
மத்திய அரசு நிச்சயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட, (கொள்முதல் விலை) மாநில அரசுகள் கூடுதல் விலை, போனஸ் அறிவிப்பது பற்றி குறிப்பிட்டு பேசிய பவார், இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்த உணவு அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாநில அரசுகள் கூடுதல் விலை அறிவிக்கும் பழக்கத்தை தொடர கூடாது என்று கருத்தொற்றுமை ஏற்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துரதிஷ்டவசமாக எந்த கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை.
மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை கூட, மாநில அரசுகள் கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்க கூடாது என்றும், மத்திய அரசு அறிவிக்கும் விலையே சட்டபூர்வமானது என்று சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் ஒரே கட்சி பலமாக இல்லாமல், பல கட்சி ஆதரவுடன் அரசு இருப்பதால் சாத்தியமில்லாமல் இருக்கிறது இந்த நிலை மாறினால் தான் சட்டதிருத்தம் கொண்டுவர முடியும் என்று பவார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் 62 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் இப்போது 49 லட்சம் டன் சர்க்கரைதான் உற்பத்தியாகும் என்று தெரிகிறது. இதே போல் உத்தரபிரதேசம். கர்நாடாகா போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று தெரிகிறது என்று சரத்பவார் தெரிவித்தார்.