சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் பரிசீலனை-செபி

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (15:51 IST)
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் சமீபத்தில் மேடாஸ் பிராபர்ட்டி, மேடாஸ் இன்ப்ரா ஆகிய இரண்டு நிறுவனங்களையும் வாங்குவதாக அறிவித்து, பிறகு பின்வாங்கிய விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று செபி சேர்மன் சி.பி.பாவே தெரிவித்தார்.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜீ. இவர் மகன்களுக்கு சொந்தமான மேடாஸ் பிராபர்ட்டி, மேடாஸ் இன்ப்ரா ஆகிய இரண்டு நிறுவனங்களையும், 1.6 பில்லியன் டாலருக்கு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் கையகப்படுத்த போவதாக அறிவித்தது.

இதற்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உட்பட, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சத்யம் கம்ப்யூட்டரின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. இதன் பங்கு விலை புதன்கிழமை மட்டும் 30 விழுக்காடு சரிந்தது.

இதை அடுத்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், இரண்டு நிறுவனங்களை கையகப்படுத்தும் கைவிட்டதாக அறிவித்தது.

இதன் நடவடிக்கைகள் பங்குச் சந்தை வட்டாரம், முதலீட்டு நிறுவனங்கள், சில்லரை முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் ஆகிய தரப்பினரின் மத்தியில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபியின் சேர்மன் சி.பி.பாவே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், இரண்டு மேடாஸ் நிறுவனங்களையும் கையகப்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

மும்பையில் பங்குச் சந்தை 2008 என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கு தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பாவே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பிரச்சனை பற்றி முழு அளவில் ஆய்வு செய்த பிறகு தான் கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

தேசிய பங்குச் சந்தை, முன்பேர சந்தையில் வர்த்தகத்தை காலை 8 மணியில் இருந்து தொடங்க கேட்டுள்ள அனுமதி பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். ( தற்போது தேசிய பங்குச் சந்தையின் முன்பேர சந்தையில் வர்த்தகம் காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது. மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையின் நேரத்திற்கு ஏற்றமாதிரி வர்த்தகத்தை இரண்டு மணி நேரம் முன்னதாக தொடங்க அனுமதி கேட்டுள்ளது).

இதில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன், இந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவபர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இவர்களில் சிலர் வர்த்தகத்தை முன்கூட்டியே தொடங்குவது சாத்தியப்படாது என்று தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்