ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் வட்டி குறையலாம்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:41 IST)
புது டெல்லி: ஏற்கனவே வாங்கிய வீட்டு கடனுக்கும் வட்டியை குறைக்க, வங்கிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பொதுத் துறை வங்கிகள், வீட்டு வசதி கடனுக்கு வட்டியை குறைத்துள்ளன.
இதன்படி புதிதாக வீடு வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வங்கிகளில் வாங்கும் கடனுக்கு ரூ.5 லட்சம் கடனுக்கான வட்டி 8.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ. இருபது லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 9.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் சென்ற 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இந்த புதிய வட்டி விகிதம் அடுத்த ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 20 வருடங்களுக்கான வீட்டு வசதி கடன்களுக்கு, முதல் 5 வருடம் எவ்வித வட்டி மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளன.

இந்த குறைந்த வட்டி கடன்கள் அடுத்த ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி வரை வாங்கும் கடனுக்கே பொருந்தும். ஏற்கனவே வாங்கியுள்ள கடனுக்கு பொருந்தாது. அதிகபட்சமாக 20 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வாங்கும் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட வீட்டு வசதி கடனுக்கு, முதல் ஐந்து வருடங்களுக்கு அதிகபட்சமாக 8.5 விழுக்காடு வட்டி இருக்கும்.

இதே போல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகவும், ரூ.20 லட்சத்திற்குள் உள்ள கடனுக்கான வட்டி அதிகபட்சமாக 9.25 விழுக்காடாக இருக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே வாங்கிய வீடு வசதி கடனுக்கான வட்டியும் குறைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரப்பட்டது.

மக்களவையில் நேற்று பொருளாதார நிலை பற்றி நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் (முன்னாள் நிதி அமைச்சர்)ப.சிதம்பரம் பேசுகையில், நாங்கள் வங்கிகளிடம் முன்னுரிமை வட்டி விகிதத்தை குறைக்குமாறு கூறி வருகின்றோம். இவ்வாறு வட்டியை குறைத்தால் ஏற்கனவே வாங்கிய வீட்டு வசதி கடனில் நிரந்தர வட்டி, மாறும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியும் குறையும்.

ஏற்கனவே வாங்கிய மாறும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி ஏன் குறைய வில்லை என்று பொருத்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் வீட்டு வசதி, கட்டுமான துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வளர்ச்சி பொருத்தே இரும்பு உற்பத்தி, சிமெண்ட், செங்கல், குழாய்கள், மின் சாதனங்கள், வேலை வாய்ப்பு ஆகியவைகளின் வளர்ச்சியும் இருக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்