இந்திய-பாக் வர்த்தகம் பாதிப்பு

புதன், 17 டிசம்பர் 2008 (16:52 IST)
இஸ்லாமாபாத்: மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், இந்தியாவிற்கு வந்து பாக்கு, வெற்றிலை, சிகரெட், சேலை, அழகு சாதன பொருட்களை வாங்கி செல்வார்கள். இதே மாதிரி இந்தியாவைச் சேர்ந்தவர்களும், பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். பாகிஸ்தானில் இருந்து உலர் திராட்சை போன்றவைகளை வாங்கி வருவார்கள்.

இரு நாடுகளிடையே சில்லரை வியாபாரிகளால் நடக்கும் இத்தகைய வர்த்தகம் டீன் டிரேட் என்று அழைக்கப்படுகிறது.

முன்பு அதிக அளவு நடந்து வந்த சில்லரை வியாபாரிகள் இடையிலான வர்த்தகம். சமீபகாலமாக இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படும் போது முழுமையாக நின்று விடும். அல்லது குறைந்த அளவிலேயே இருக்கும்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே, கராச்சியில் உள்ள பாம்பே பஜாரில் பல கடைகள் இருந்தன.

இரு நாடுகளிடையே ஏற்படும் பதட்டத்தால், வியாபாரிகளின் போக்குவரத்து மிக குறைந்த அளவே உள்ளது. இதனால் கராச்சி பாம்பே பஜாரில் இந்திய பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகள், தற்போது தொழுகையின் போது அணிந்து கொள்ளும் பைஜாமைவை விற்பனை செய்பவர்களாக மாறிவிட்டனர் என்று தனது அடையாளத்தை காண்பிக்க விரும்பாத கராச்சி வியாபாரி கூறியதாக பாகிஸ்தான் செய்தி பத்திரிக்கையான டான் கூறியுள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், மும்பை தாக்குதல் நடப்பதற்கு முன்பு, தினசரி இந்தியாவிற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் மூலம் பொருட்களை அனுப்பிக் கொண்டு இருந்தோம். தற்போது வாரத்திற்கு 2 அல்லது மூன்று பேர் வாயிலாகவே வியாபாரம் செய்கின்றோம் என்று கூறுகின்றனர்.

இப்போது இந்தியாவிற்கு செல்லும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மூலம் சல்வார், துப்படா ஆகியவை மட்டுமே கொண்டுவரப்படுகின்றன. முன்பு இந்தியாவில் இருந்து சேலை வாங்கி வருவோம். தற்போது சேலை வாங்கி வருவது நின்று விட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்