மும்பை: பொதுத் துறை வங்கிகள், வீட்டு வசதி கடன், சிறு குறுந் தொழில்களுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன.
இந்த வட்டி குறைப்பு பற்றி பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் ஒ.பி.பத் கூறுகையில், ரூ.5 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 8.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ. இருபது லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 9.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும். இது 2009 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 20 வருடங்களுக்கான வீட்டு வசதி கடன்களுக்கு, முதல் 5 வருடம் எவ்வித வட்டி மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
குறுந்தொழில் பிரிவுகளுக்கான வட்டி விகிதம் 1 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வாங்கிய கடனுக்கும், புதிய கடனுக்கும் பொருந்தும்.
சிறு, நடுத்தர தொழில் பிரிவுக்கான கடன் அரை விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி ரூ.10 கோடி வரையிலான கடனுக்கு பொருந்தும். நவம்பர் 30 ஆம் தேதியன்று உள்ள வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து, புதிய வட்டி விகிதம் கணக்கிடப்படும். தற்போது குறைத்துள்ள அரை விழுக்காடு வட்டி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.