பணவீக்கம் 8 % ஆக குறைவு

வியாழன், 11 டிசம்பர் 2008 (16:26 IST)
புது டெல்லி: மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் 8.40 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற ஆண்டு நவம்பர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கம் 3.89 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தில் ராகி, உளுந்து, சோளம், மக்காச் சோளம், ஆமணக்கு விதை, நிலக்கடலை ஆகியவற்றின் விலை தலா 1% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இயற்கை ரப்பர் விலை 5%, கொப்பரை தேங்காய் விலை 1% குறைந்துள்ளது.

சுத்திகரிக்காத சமையல் எண்ணெய் விலை 12%, கடுகு எண்ணெய் 1% குறைந்துள்ளது. ஆனால் கடலை எண்ணெய் விலை 1% அதிகரித்துள்ளது.

உருக்கு, இயந்திரங்கள் போன்ற உற்பத்தி பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பேப்பர் வகைகளில் போஸ்டர் பேப்பர், கிராப்ட் பேப்பர் விலை தலா 6% அதிகரித்துள்ளது.

பி.வி.சி பொருட்களின் விலை 2% அதிகரித்துள்ளது.

இரசாயண பொருட்களை பொறுத்த வரை டைட்டேனியம் ஆக்ஸைடு. தீப்பெட்டி விலை தலா 14% அதிகரித்துள்ளது.

மெத்தனால் விலை 13% குறைந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பணவீக்கம் பற்றிய புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்