வாஷிங்டன்: உலக அளவிலான வர்த்தகம், 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடாக குறையும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி முன்பு 2008 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக இருக்கும் என்று கணித்து இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் குறையும் என்று கூறியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு, தெற்காசிய நாடுகளையும் பாதித்துள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வளர்ச்சி குறையும்.
அதே நேரத்தில் 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி நேற்று வெளியிட்ட உலக பொருளாதார கணிப்பு-2009 இல் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 2008 ஆம் ஆண்டு குறையாது. இதற்கு முந்தைய ஆண்டைப் போலவே 6% ஆக இருக்கும்.
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டான 2009 இல் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 3% ஆக குறையும். 2001 இல் அதிகரித்து 4.5% என்ற அளவு இருக்கும்.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவது கண்கூடாக தெரிகிறது. தெற்காசிய நாடுகளில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 12% ஆக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 2% ஆக குறைந்து விட்டது.
உலக அளவில் 2008 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 2.5% இருக்கும். அதற்கு அடுத்த ஆண்டில் (2009) பொருளாதார வளர்ச்சி 0.9% ஆக குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சி, சென்ற வருடம் 9.5% ஆக இருந்தது. இது குறைந்து மீண்டும், வளர்ச்சியை நோக்கி இருந்தாலும் கூட 4.9 விழுக்காடாகவே உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவ் பேசும் போது, இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.