புது டெல்லி: துறைமுகம், நெடுஞ் சாலை போன்ற உள்கட்டைமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி உதவி அளிக்கும் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் [India Infrastucture Finance Company Ltd (IIFCL)], வரிச்சலுகையுடன் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் நிதி உதவி போல், மற்றொரு மடங்கு நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு கடனாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு, வங்கி, மாநில நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனில் ஒரு பகுதியை வழங்கும். இதனால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும். குறிப்பாக தனியார்- அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் துறைமுகம், நெடுஞ்சாலை வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும்.