மத்திய அரசு 45 ஆயிரம் கோடி கடன்

சனி, 6 டிசம்பர் 2008 (16:56 IST)
புது டெல்லி: மத்திய அரசு செலவினங்களை சமாளிக்க மேலும் ரூ.45 ஆயிரம் கோடி கடன் வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிதி ஆண்டு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த மூன்று மாத செலவினங்களை சமாளிக்க, மத்திய அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு மேலும் ரூ. 45 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடாளுமன்றம் கூடுதல் செலவினங்களுக்கான ஒப்புதல் அளித்துள்ளது இதை சமாளிக்க அதிக நிதி தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்குள் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும்.

டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை கடன் பத்திரங்கள் வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்டும். ஜனவரி மாதத்தில் 20 ஆம் தேதிக்குள் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டும் என்று தெரிகிறது.

பிப்ரவரியில் ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும்.

இந்த கடன் பத்திரங்களில் 5 விழுக்காடு சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும். நிதி சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) மதிப்பீட்டின் படி, இந்த நிதி ஆண்டில் (2008-09) மத்திய அரசு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்