மத்திய அரசு சலுகைகளை நாளை அறிவிக்கலாம்

சனி, 6 டிசம்பர் 2008 (13:50 IST)
புது டெல்லி: மத்திய அரசு பொருளாதார மந்த நிலையை மாற்றி, புத்துயிர் ஊட்ட பல்வேறு சலுகைகளை நாளை அறிவிக்கும் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி அறிவிக்கும் சலுகைகளுடன், மத்திய அரசும் நாளை பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று பிரதமர் அலுவலகம் அறிவிக்கும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசு உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குக சலுகை அளிக்கும் வகையில், பல்வேறு பொருட்களின் உற்பத்தி வரியை குறைக்கும் என்று தெரிகிறது.

நேற்று, இந்தியா-ரஷியா நாடுகளின் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொருளாதார மந்த நிலையை மாற்றி, வளர்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக நாளை பிரதமர் சலுகைகளை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

அத்துடன் ரிசர்வ் வங்கி வட்டியையும், வங்கிகளின் இருப்பு விகிதத்தையும் குறைக்கும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவின் கூட்டம் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசின் உதவிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

அதற்கு அடுத்த நாள் அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில், செயலாளர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், திட்ட குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பல்வேறு துறையைச் சேர்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி உட்பட பல்வேறு தொழில் துறைகளுக்கு உதவிகள் வழங்குவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, சென்ற புதன் கிழமையன்று, உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஏழு வருடங்களில், முதன் முறையாக அக்டோபர் மாதத்தில் 12 விழுக்காடாக குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஜவுளி, கைவினை பொருட்கள், வைரம் போன்ற ஆபரணங்கள், இன்ஜினியரிங் துறை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு எடுத்துள்ள கணக்கெடுக்கின் படி. 121 ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 65 ஆயிரம பேர் வேலை இழந்துள்ளனர். இந்த வருடம் ஜவுளி துறையில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மேலும் ஐந்து லட்சம் பேருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு, உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாடீல்,தனது பதவியை ராஜினமா செய்தார். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சகத்தின் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நாளை மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கியில், மற்ற வங்கிகள், அவற்றின் வைப்பு நிதியில் 5.5 விழுக்காடு இருப்பு நிதியாக வைக்க வேண்டும் என்று உள்ளது. இது குறைக்கப்படலாம். வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் ரிபோ வட்டி விகிதம் 7.5 விழுக்காடாக உள்ளது. வங்கிகள், அவற்றின் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்கின்றன. இது ரிவர்ஸ் ரிபோ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு தற்போது 6 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு வட்டிகளும் குறைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று தெரிகிறது.

இதனால் வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருள் உற்பத்தி, உள்கட்டமைப்பு போன்ற தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மாறும்.

ரியல் எஸ்டேட், கட்டுமான துறைக்கு உதவிடும் வகையில், ரூ.10 லட்சம் வரை உள்ள வீட்டு கடனுக்கான வட்டியில் சலுகை வழங்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்