விலை குறைப்பு- வர்த்தக சங்கங்கள் மகிழ்ச்சி

சனி, 6 டிசம்பர் 2008 (11:09 IST)
புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதை பல்வேறு தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இதனால் பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக பிக்கி, சி.ஐ.ஐ தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் அசோசெம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்படும் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.2 குறைத்தது.

இது குறித்து இந்திய வர்த்தக தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் (பிக்கி) பொதுச் செயலாளர் அமித் மித்ரா கூறுகையில், இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இதனால் பணவீக்கம் மேலும் குறைவதுடன், எல்லா தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைமை இயக்குநர் சந்திரஜீட் பானர்ஜி கூறுகையில், விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதனால் பணவீக்கம் மேலும் குறையும் என்று கூறியுள்ளார்.

அசோசெம் பொதுச் செயலாளர், டி.எஸ்.ராவாத் கூறுகையில், மத்திய அரசு, அடிக்கடி பெட்ரோல், டீசல் போன்றவைகளின் விலைகளை பரிசீலனை செய்யும் என்று நினைக்கின்றேன். கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 50 டாலருக்கும் குறைவாக இருந்தால், மத்திய அரசு மேலும் விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை டிசம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி 41.53 டாலராக குறைந்துள்ளது இதன் விலை ஜீலை 3 ஆம் தேதி பீப்பாய் 142.03 டாலராக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், மத்திய அரசு ஜீன் மாதம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.3, சமையல் எரியாவு சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்தது.

தற்போது இதில் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.2 குறைக்கப்பட்டு உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்