புது டெல்லி: மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த ஏழு மாதங்களாக இல்லாத அளவு நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.4 விழுக்காடாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு, உருக்கு போன்ற உலோகங்களின் விலை குறைந்துள்ளதால், பணவீக்க அளவு குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 8.84% ஆக இருந்தது.
சென்ற வருடம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 3.33% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கணக்கிடப்பட்டுள்ள வாரத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடல் மீன், மைசூர் பருப்பு, அரிசி, முட்டை, பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது.
விமான பெட்ரோல் விலை 14%, உலை எண்ணெய் விலை 23%, நாப்தா விலை 13%, இலகு ரக டீசல் விலை 8% குறைந்துள்ளது.
பணவீக்கம் குறையும் வகையில் ரிசர்வ் வங்கி வரும் .சனிக்கிழமை சில நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளது.
வட்டி விகிதம், வங்கிகளின் இருப்பு விகிதம் போன்றவை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிதி ஆண்டின் முடிவிற்குள் பணவீக்கம் 4% முதல் 5% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஹெச்.டி.எப்.சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அப்கிக் பருவா கூறுகையில், மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம் 4% ஆக குறையும் என்று எதிர் பார்க்கின்றேன். தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் எடுக்க உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி ரிபோ, ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைக்கும் என்று நினைக்கின்றேன் என்று கூறினார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களின் விலை குறைந்தால் மட்டுமே, பணவீக்கம் குறைந்துள்ளதன் பலன் கிடைக்கும்.