சிங்கப்பூர்: பெட்ரோலிய கச்சா எண்ணெய் (crude) விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளின் தொழில் துறை, சரக்கு போக்குவரத்து, பொது மக்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது.
இதனால் அதிக அளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விற்பனை குறைந்துள்ளது. இதன் விலை அதிகமாக குறையாமல் இருக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் டிசம்பர் மாதத்தில் தினசரி 15 லட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்தன. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று சிங்கப்பூர் சந்தையில் ஜனவரி மாதத்திற்கான அமெரிக்கா பயன்படுத்தும் இலகுரக கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் 45.96 டாலராக குறைந்தது.
கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு, கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 46 டாலருக்கும் குறைந்தது.
இது வரை இல்லாத அளவு சென்ற ஜீலை மாதத்தில் 1 பீப்பாய் விலை 147 டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏறக்குறைய 100 டாலர் குறைந்து, 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 46 டாலராக குறைந்துள்ளது.
இதே போல் லண்டன் சந்தையில் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் 1 பீப்பாய் விலை 45.10 டாலராக குறைந்தது.
இது குறித்து கச்சா வர்த்தக நிபுணர்கள் கூறுகையில், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருகிறது. இதன் தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருப்பதால் விலை தொடர்ந்து குறைவதாக தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இதனை ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.
அரபு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி தேக்கத்தினால், அந்த நாடுகள் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளும் பாதிக்கப்படும்.
ஏனெனில் அரபு நாடுகளில் தொழில் திட்டங்கள் உட்பட, பல்வேறு கட்டுமானப் பணிகளில் அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் இலாபம், பொருளாதார நிலை பாதிக்கப்படும்.
அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அரபு நாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு போன்ற இன்னல்களை சந்திக்க் வேண்டியதிருக்கும்.
அயல்நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், மாதா மாதம் கணிசமான அந்நியச் செலவாணி அனுப்புகின்றனர். இந்த அந்நியச் செலவாணி வருவது தடைபடும்.
அத்துடன் ஒபெக் அமைப்பில் இல்லாத ரஷியாவும், கணிசமான அளவு கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதன் விலை குறைவால், ரஷியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்க, வருகின்ற 17 ஆம் தேதி அல்ஜிரியாவில் ஒபேக் நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கு முன்பு ஒபெக் நாடுகளின் முடிவுகளை, ரஷியா பின்பற்றாது. ஆனால் தற்போது ஒபெக் நாடுகள் எடுக்கும் முடிவுக்கு ரஷியாவும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.