தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நபார்டு நிதியுதவி

புதன், 3 டிசம்பர் 2008 (14:36 IST)
சென்னை : ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன், தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நபார்டு வங்கி நிதி ஒதுக்கியுள்ளது.

ஐந்து பாலங்கள் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.127.01 கோடி. இந்த பாலங்கள் கட்ட நபார்டு வங்கி, ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் ரூ.101.61 கோடி அளிக்கவுள்ளது.

இந்த நிதியத்தின் திட்ட ஒப்புதல் குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது. அப்போது தமிழகத்தில் ஐந்து பாலங்கள் கட்ட நிதி ஒதுக்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன் படி தஞ்சாவூர், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள, இந்தப் பாலங்கள் மூலம் 109 கிராமங்களுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்திற்கு 2008-09 நிதி ஆண்டில் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் வாயிலாக ரூ.905.42 கோடி நபார்டு வங்கி அளித்துள்ளது. இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ரூ.6243.77 கோடியை எட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்