சீனா 100 மில்லியன் டாலர் உதவி

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:33 IST)
காத்மண்டு: சீனா, நேபாளத்திற்கு 100 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மன்னராட்சி முடிந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற ஆட்சி நடக்கிறது.

மாவோயிஸ்ட் தலைமையிலான நேபாளத்திற்கு, இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு முன்பு சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டார்.

இதை அடுத்த சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜீசி (Yang Jiechi) மூன்று நாள் பயணமாக நாளை நேபாளத்திற்கு வருகிறார்.

இது குறித்து நேபாள பிரதமர் பிரசாந்தாவின் அயலுறவு ஆலோசகர் ஹீரா பகதூர் தபா கூறுகையில், சீன அயலுறவு அமைச்சரின் வருகையின் போது, சீனாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே பொருளாதார, தொழில் நுட்ப பரிமாற்ற உடன்பாடு ஏற்பாடு கையெழுத்தாகிறது. சீனா 100 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

நேபாளத்தில் மன்னராட்சி ஒழிந்து, மாவோயிஸ்ட் தலைமையிலான ஜனநாயக ஆட்சி மலர்ந்த பிறகு, அந்நாட்டுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான ஆட்சி அமைந்தது. தற்போது சீன அயலுறவு அமைச்சரின் தலைமையில் உயர் மட்ட குழு, நேபாளத்திற்கு வருகிறது.

இவர்கள் நேபாளத்தில் தங்கி இருக்கும் போது, பிரதமர் பிரசாந்தா, குடியரசு தலைவர் ராம் பரன் யாதவ், அயலுறவு அமைச்சர் உபேந்திரா யாதவ் ஆகியோரை சந்திப்பார்கள்.


சீன அயலுறவு அமைச்சர், நேபாள அயலுறவு அமைச்சருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று நேபாள அயலுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வார துவக்கத்தில் சீன ராணுவ உயர் அதிகாரிகள் குழு, நல்லெண்ண விஜயமாக நேபாளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் மருத்துவமனை கட்ட சீனா உதவி செய்ய உள்ளது. அத்துடன் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பதற்கு உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து திபேத் வரை உள்ள ரயில் பாதையை, நேபாள எல்லை வரை விரிவுபடுத்தவும் சீனா ஆலோசித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்